விஜயின் தவெக கொள்கையே தவறு; எழுதிக்கொடுப்பவரை மாற்றுங்கள் : சீமான்
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய்யை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாகச் சாடியுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் கட்சியின் அடிப்படையே தவறு. இது கொள்கை இல்லை கூமுட்டை. அதுவும் அழுகின கூமுட்டை. ஒன்னு சாலையில் அந்த ஓரத்தில் நிற்க வேண்டும். இல்லலையென்றால் சாலையில் இந்த ஓரத்தில் நிற்கவேண்டும். சாலையில் நடுவில் நின்றால் ஆபத்துதான் என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய திரு சீமான், “திராவிடம் என்றால் என்ன என்று அவர்களுக்கும் தெரியவில்லை, தமிழ் தேசியம் என்ன என்பது இவர்களுக்கும் தெரியவில்லை. ஆத்துல கால வை இல்லன்னா சேத்துல கால வை. இரண்டிலும் கால் வைத்தால் என்ன அர்த்தம். திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்று, எங்கள் கண்ணு என்று கூறியதைக் கேட்டுப் பயந்துவிட்டேன்,” என்று கூறியுள்ளார்.
திராவிடமும் தமிழ் தேசியமும் வேறு வேறானவை. ஒன்னு சாம்பார் அல்லது கருவாட்டுக் குழம்பு என்று சொல்லு, கருவாட்டுச் சாம்பார் என்று சொல்லாதே. வில்லனும் கதாநாயகனும் எப்படி ஒரே ஆளாக இருக்க முடியும்? இரண்டும் ஒருவரின் கொள்கையாக இருக்கவே முடியாது. ஒன்று கொள்கையை மாற்றுங்கள் அல்லது எழுதிக்கொடுப்பவரை மாற்றுங்கள் என்று கூறியுள்ளார்.
சனிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “திராவிடமும் தமிழ் தேசியமும் எப்படி ஒன்றாக முடியும்? இதற்காகத் திராவிடம் வேண்டும். இதற்காகத் தமிழ் தேசியம் வேண்டும் என்று யார் விளக்கம் சொல்லுவார்கள்? விஜய்யா அவருக்குக் கீழ் உள்ள தம்பிகளா? விஷமும் விஷத்தை முறிக்கும் மருந்தும் எப்படி ஒன்றாக இருக்க முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.