மன்னாரில் சட்டவிரோதமாக கடலட்டை பிடித்த 6 பேர் கைது.
மன்னார் கிழக்கு கடற்கரைப் பகுதியான அரிப்பு – பண்டாரவெளி கடற்பரப்பில் கடற்படையால் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது சட்டவிரோதமான முறையில் கடலட்டை பிடித்த 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றுமுன்தினம் இரவு இடம்பெற்ற இந்த நடவடிக்கையின்போது ஒரு டிங்கி படகு மற்றும் 227 சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட கடலட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சட்டவிரோத மீன்பிடி நடைமுறைகளைத் தடுக்கும் நோக்கில் இலங்கைக் கடற்படை, தீவைச் சுற்றியுள்ள கரையோர மற்றும் கடற்பரப்புகளில் வழக்கமான தேடுதல் நடவடிக்கைகளையும் ரோந்துப் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றது.
இந்த நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் சிலாவத்துறை, அரிப்பு மற்றும் நானாட்டான் பிரதேசங்களைச் சேர்ந்த 22 வயதுக்கும் 50 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் கடலட்டை மற்றும் இழுவைப் படகுகளுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் கடற்றொழில் உதவிப் பணிப்பாளர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.