திருட்டுத்தனமாக நுழைந்த சுமந்திரனுக்கு வன்னி மண் தொடர்பில் என்ன தெரியும்? – செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தனின் வரலாறும் தெரியும் என்கிறார் எமில்காந்தன்.
“தமிழ் மக்களின் இரத்தத்தாலும், சதையாலும் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் திருட்டுத்தனமாக உள்நுழைந்த சுமந்திரன் வன்னியில் இருக்கும் பிரச்சினைகளுக்காக எப்படி இறங்கி வருவார்.?” – என்று கோடரி சின்னத்தில் போட்டியிடும் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளர் எமில்காந்தன் கேள்வி எழுப்பியதுடன், செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன் ஆகியோரது முழு வரலாறும் சொல்ல வேண்டி வரும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
வவுனியாவில் உள்ள தனது அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே எமில்காந்தன் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையிள்,
“இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமை யார் என்று நான் அண்மையில் ஒரு கேள்வி எழுப்பியிருந்தேன். அதற்கு சுமந்திரன் பதில் அளித்துள்ளார். அவரது பதிலில் வன்னியில் உள்ள எமது வேட்பாளர்களுக்கும் எமில்காந்தனுக்கும் இடையிலான விடயம் அது. அந்த லெவலுக்குத்தான் இறங்கிப்போகத் தேவையில்லை என்றவாறாக ஒரு பதிலைச் சுமந்திரன் சொல்லியிருக்கின்றார்.
தமிழ் மக்களின் இரத்தத்தாலும் சதையாலும் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் திருட்டுத்தனமாகத் தேசியப் பட்டியல் ஊடாக அரசியலுக்குள் நுழைந்த சுமந்திரனுக்கு வன்னியில் இருக்கும் பிரச்சினைகளுக்காக இறங்கி வரவேண்டிய தேவை இல்லை. அப்படிச் சொல்வது அவருக்குப் பெரிய விடயமாக இருக்காது.
மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாத இவர்கள் தமது இரண்டாம் கட்ட உறுப்பினர்களை வேட்பாளர்களாக அனுப்பி அவர்கள் மூலமாக இன்னுமொரு திருட்டு வெற்றியை நுட்பமான முறையில் பெற முயற்சிக்கின்றார்கள். சுமந்திரனால் பதில் அளிக்க முடியாத அளவுக்கு வன்னி மாவட்டம் ஒன்றும் இரண்டாம் நிலையிலோ அல்லது இங்கு வாழ்வோர் இரண்டாம் தரப் பிரஜைகளோ அல்ல. வன்னியில் இருப்பவர்கள் சுமந்திரனை விடத் தரமான வேலைகளைச் செய்யக்கூடியவர்கள்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவானபோது என்னுடைய பங்களிப்பும் அதில் இருந்தது. அதனூடாக மிகக் கடுமையான காலங்களையும் நாங்கள் கடந்து அதன் பலம் நிர்ணயிக்கப்பட்டது. அந்தப் பலத்தின் மீது ஏறி நின்று திருட்டுத்தனமாக உள்ளே வந்து இவ்வாறான பதில் சொல்வதை முதலில் நிறுத்திக் கொள்ளுங்கள்.
அதேபோல், வன்னியில் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சிவசக்தி ஆனந்தன் ஆகியோரது ஆதரவாளர்கள் பிரசாரக் கூட்டங்களில் எமது சின்னமான கோடரிச் சின்னத்தைத் தொடர்ச்சியாக விமர்சிக்கின்றார்கள். அவற்றை இன்றிலிருந்து நிறுத்திக் கொள்ளுங்கள்.
காரணம் உங்களுடைய அத்தனை வரலாறுகளும் நான் அறிந்தவன். நீங்கள் ஆரம்பத்தில் நாடாளுமன்றம் சென்ற காலத்திலிருந்து அத்தனையும் நான் அறிந்தவன். எனவே, மக்களைப் பிழையாக வழி நடத்தி என் மீது சேறு பூசுவதை நிறுத்துங்கள். அல்லது அடுத்த ஊடகவியலாளர் மாநாட்டில் நேரடியாக உங்களைப் பற்றி பேச வேண்டிய தேவை ஏற்படும்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சிவசக்தி ஆனந்தன் ஓர் அறிக்கையை வெளியிட்டிருந்தார். செல்வம் அடைக்கலநாதன் போட்டியிட்ட அணி அரசிடம் இலஞ்சமாகப் பணம் பெற்றுக்கொண்டு தேர்தலில் முகம்கொடுப்பதாக பகிரங்கமாக அவர் சொல்லியிருந்தார். அந்தக் குற்றச்சாட்டுக்கு என்ன நடந்தது? அவர்கள் பணம் வாங்கியதை சிவசக்தி ஆனந்தன் நிரூபித்தாரா அல்லது வாங்கவில்லை என்று அடைக்கலநாதன் நிரூபித்தாரா என்பதை மக்களுக்குத் தெரிவியுங்கள். ஏனெனில் இன்று இருவரும் ஒரே கட்சியில் போட்டியிடுகின்றீர்கள்.
எந்தக் கட்சியையும் விமர்சிப்பதில்லை என்பது எமது கொள்கையாக இருந்தது. ஆனால், நீங்கள் எங்களை சீண்டிக் கொண்டிருந்தால் நாமும் பதில் சொல்லியாக வேண்டும்.” – என்றார்.