ஜோர்ஜியா – ஒரு நிறப் புரட்சியை நோக்கி? சுவிசிலிருந்து சண் தவராஜா

மேனாள் சோவியத் ஒன்றிய நாடான ஜோர்ஜியாவில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆளுங் கட்சியான ஜோர்ர்ஜிய கனவுக் கட்சி வெற்றி பெற்றுள்ளது. தொடர்ச்சியாக நான்காவது தடவையாக வெற்றி பெற்றுள்ள இந்தக் கட்சி அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 53.94 விழுக்காடு வாக்குகளைப் பெற்றுள்ளது. 150 ஆசனங்களைக் கொண்ட நாடாளுமன்றில் 89 இடங்களைப் பெற்று பெரும்பான்மையைத் தக்க வைத்துள்ள போதிலும் கடந்த முறையோடு ஒப்பிடுகையில் ஒரு ஆசனத்தை இந்தக் கட்சி இழந்துள்ளமை நோக்கத்தக்கது. எனினும் கடந்த முறையை விடவும் 5.71 விழுக்காடு வாக்குகளை அதிகமாகப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆளுங் கட்சியை எதிர்த்துப் போட்டியிட்ட ஜோர்ஜிய சாசனம் என்ற நான்கு கட்சிகளின் கூட்டணி 37.78 விழுக்காடு வாக்குகளைப் பெற்றுள்ளது. இந்த அணியில் இடம்பெற்றுள்ள 4 கட்சிகளின் கூட்டான மாற்றத்துக்கான கூட்டணி 11.04 விழுக்காடு வாக்குகளைப் பெற்று 19 ஆசனங்களைத் தனதாக்கிக் கொண்டது. ஐக்கிய தேசிய இயக்கம் என்ற கட்சி 10.17 விழுக்காடு வாக்குகளைப் பெற்று 16 ஆசனங்களைப் பெற்றுள்ளது. 8.81 விழுக்காடு வாக்குகளைப் பெற்ற வலுவான ஜோர்ஜியா என்ற கட்சி 14 ஆசனங்களையும், 7.77 விழுக்காடு வாக்குளைப் பெற்ற ஜோர்ஜியாவுக்கு கெகாரியா என்ற கட்சி 12 ஆசனங்களையும் பெற்றுள்ளது.

நடைபெற்று முடிந்த ஜோர்ஜியப் பொதுத் தேர்தல் இம்முறை உலகின் கவனத்தை வெகுவாக ஈர்த்திருந்தது. ரஸ்யாவுடன் எல்லையைப் பகிர்ந்து கொண்டுள்ள ஜோர்ஜியாவின் தற்போதைய ஆளுங் கட்சியான ஜோர்ஜியக் கனவு ரஸ்ய ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்ட கட்சியாக மேற்குலகினால் நோக்கப்பட்டு வருகின்றது. இந்தக் கட்சியைத் தோற்கடித்து ஒரு ஆட்சி மாற்றத்தை உருவாக்கும் நோக்குடனேயே ஜோர்ஜிய சாசனம் என்ற நான்கு கட்சிகளின் கூட்டணி உருவாக்கப்பட்டது.

மேற்குலக சார்பானவர் என அறியப்படும் நாட்டின் அதிபராக உள்ள சலோம் சவ்ராவிச்விலி இந்தக் கூட்டணியை உருவாக்குவதில் பின்னணியில் இருந்து செயல்பட்டார். ஜோர்ஜியாவில் இருந்து சென்று பிரான்ஸ் நாட்டில் அரசியல் தஞ்சம் பெற்றிருந்த குடும்பத்தின் வாரிசான இவர் பல வருட காலம் பிரான்ஸ் அரசாங்கத்தின் ராஜதந்திர சேவையில் பணியாற்றியிருந்தார். 2004ஆம் ஆண்டில் இருநாட்டு ஒப்பந்தந்தின் கீழ் ஜோர்ஜியக் குடியுரிமை பெற்ற இவர் ஜோர்ஜியாவின் வெளியுறவுத் துறை அமைச்சராக நியமனம் பெற்றார்.

2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் சுயாதீன வேட்பாளராகக் களமிறங்கிய இவர் இரண்டாவது சுற்றுத் தேர்தலில் தற்போதைய ஆளுங் கட்சியான ஜோர்ஜியக் கனவின் உதவியோடு வெற்றி பெற்றார். ஜோர்ஜியாவில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஐந்தாவது ஜனாதிபதியான இவர் ஜோர்ஜியாவில் தெரிவு செய்யப்பட்ட முதலாவது பெண் ஜனாதிபதி என்ற பெருமையைக் கொண்டவர். அதே நேரம் புதிய அரசியலமைப்பு மாற்றம் காரணமாக ஜனாதிபதியை மக்கள் வாக்கு மூலம் தெரிவு செய்யும் நடைமுறை ஒழிக்கப்பட்டுள்ள நிலையில் ஜோர்ஜியாவில் மக்களின் வாக்கு மூலம் தெரிவு செய்யப்பட்ட இறுதி ஜனாதிபதியாகவும் வரலாற்றில் இடம்பிடித்து நிற்கிறார்.

ஜோர்ஜியக் கனவுக் கட்சியின் ஆதரவோடு ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றிருந்த போதிலும் நாட்டின் அரசியல் சூழல் காரணமாக அந்தக் கட்சியோடு முரண்பட்டுக் கொண்டார். 2020இல் நடைபெற்ற தேர்தலில் ஊழல் புரிந்தே ஜோர்ஜியக் கனவுக் கட்சி வெற்றி பெற்றதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு, அதனையொட்டி எதிர்க் கட்சிகளால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வெளிநாட்டு உதவி பெறும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் ஊடகங்கள் தொடர்பில் அரசாங்கம் அறிமுகம் செய்த புதிய சட்டம், அதனை எதிர்த்து எதிர்க் கட்சிகள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டங்கள் என்பவை காரணமாக ஜனாதிபதிக்கும் அளுங் கட்சிக்கும் இடையில் விரிசல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த வருடத்தில் ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. எனினும் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. இதன் பின்னர் ஜனாதிபதிக்கும் ஆளுங் கட்சிக்கும் இடையிலான விரிசல் மேலும் பெரிதாகியது.

உக்ரைன் போரில் பக்கம் சாராது செயற்படும் நிலைப்பாட்டை ஜோர்ஜிய அரசாங்கம் கடைப்பிடித்து வரும் நிலையில் அந்த நிலைப்பாடு மேற்குலகின் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகின்றது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்காக விண்ணப்பித்து விட்டுக் ஜோர்ஜியா காத்திருக்கும் நிலையில் அதனை ஒரு துருப்புச் சீட்டாகப் பாவித்து அரசாங்கத்தை அடிபணிய வைக்க மேற்குலகம் முனைந்து வருவதை வெளிப்படையாக அவதானிக்க முடிகின்றது.

அதேநேரம் உக்ரைனில் ஆர்ப்பாட்டங்களைப் பின்னணியாகக் கொண்டு மேற்குலகின் நேரடித் தலையீட்டுடன் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியதைப் போன்று ஜோர்ஜியாவிலும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மேற்குலகம் முயற்சிக்கின்றதா என்ற கேள்வி எழுகின்றது. ஏனெனில் நடப்பு நிகழ்வுகளைப் பார்க்கையில் மேற்குலகில் இருந்து எழும் கண்டனங்களும், ஊடகச் செய்திகளும், ஐரோப்பிய ஒன்றியத்தின் நடவடிக்கைகளும், நாட்டில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்களும் உக்ரைனில் 2014இல் நடைபெற்ற சம்பவங்களை நினைவுபடுத்துகின்றன.

ஜோர்ஜியாவில் நடைபெற்ற தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றன எனப் பல தரப்பிலிருந்தும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில் அவ்வாறு நடைபெறவில்லை என்பதை நிரூபிக்கும் நோக்குடன் ஐந்து வாக்குச் சாவடிகளில் மறு வாக்கு எண்ணிக்கையை நடத்த அரசாங்கம் முன்வந்துள்ளது.

தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாகச் சொல்லும் ஜனாதிபதி உள்ளிட்ட தரப்பினர் அதற்கு ஆதாரமான சாட்சியங்கள் எதனையும் இதுவரை முன்வைக்கவில்லை. இருந்தும் எதிர்க் கட்சிகளின் தூண்டுதலில் ஆர்ப்பாட்டங்கள் இடம் பெற்றுள்ளன. எனினும் இந்த ஆர்ப்பாட்டங்களில் குறைந்தளவு எண்ணிக்கையான மக்களே பங்கு கொண்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆளுங் கட்சியைப் பொறுத்தவரை கிராமப் புறங்களில் அதிக செல்வாக்கு மிக்கதாக அக் கட்சி உள்ளது. அதேவேளை தலைநகர் உள்ளிட்ட நகர்ப் புறங்களில் எதிர்க் கட்சிகள் அதிக வாக்குகளைப் பெற்றுள்ளதைப் பார்க்க முடிகின்றது. இந்தப் போக்கு பொதுவாக உலகின் பல நாடுகளிலும் அவதானிக்கப்படுகின்ற ஒன்றாக உள்ளது. படித்த, செல்வாக்கு மிகுந்த மக்கள் மேற்குலக சார்பானவர்களாகவும், சாதாரண வெகுமக்கள் அயல்நாடான ரஸ்ய சார்பானவர்களாகவும் உள்ள நிலைமை மேனாள் சோவியத் ஒன்றிய நாடுகளில் பொதுவான போக்காக உள்ளது.

மேற்குலகின் சார்பற்ற ஒரு அரசாங்கத்தைத் தேர்ந்தெடுத்ததற்காக அந்த மக்கள் பழிவாங்கப்படும் வகையில் நடத்தப்படுவது அண்மைக் காலமாக உலகின் புதிய போக்காக மாறி வருகின்றது. இது மக்களின் ஜனநாயக உரிமைகளைக் கேள்விக்கு உட்படுத்தும், ஜனநாயக உரிமையை மறுக்கும் போக்காக உள்ளது. மாறிவரும் உலக ஒழுங்கைப் புரிந்து கொள்ளாமல் மேற்குலகம் தொடர்ச்சியாக நடந்து வருவது உலகின் பல நாடுகளிலும் பிரச்சனைகளைத் தோற்றுவிப்பதாக உள்ளது. வரலாற்றில் இருந்து பாடம் கற்கத் தவறும் மேற்குலகின் இத்தகைய போக்கு கண்டிக்கத் தக்கது. மக்களின் ஆதரவைப் பெற்ற ஒரு கட்சியை ஆட்சியில் இருந்து அகற்ற முயற்சிப்பது எந்த வகையிலும் ஏற்புடைய ஒன்றல்ல.

ஆனால், அது விடயத்தில் மேற்குலகிற்கு யார் பாடம் நடத்துவது? அத்தகைய வல்லமை யாரிடம் உள்ளது? அவ்வாறு எடுத்துக் கூறினால் அதனைச் செவிமடுத்து தனது தவறுகளைத் திருத்திக் கொள்ள மேற்குலகில் உண்மையான மக்கள் தலைவர்கள் இல்லாமையே இன்றைய உலகில் பெருங் குறையாக வெளிப்பட்டு நிற்கிறது.

Leave A Reply

Your email address will not be published.