மீண்டும் அமெரிக்க அதிபராகிறார் டிரம்ப்
தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிசைத் தோற்கடித்து,டிரம்ப் வரலாறு படைத்தார்
அமெரிக்க அதிபர் தேர்தலில் டோனல்ட் டிரம்ப் வாகை சூடியுள்ளார். இதனையடுத்து, இரண்டாம் முறையாக அவர் அமெரிக்க அதிபராகப் பதவியேற்கவுள்ளார்.
ஃபுளோரிடாவில் தம் ஆதரவாளர்களுக்கு மத்தியில் உரையாற்றிய டிரம்ப், “அமெரிக்கா நமக்கு எதிர்பாராத, வலுவான அதிகாரம் வழங்கியுள்ளது,” என்றார்.
தாம் தேர்தலில் வென்று, மீண்டும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதை ‘வரலாற்றின் ஆகச் சிறந்த அரசியல் நிகழ்வு’ என்று அவர் குறிப்பிட்டார்.
எட்டாண்டுகளுக்குமுன் நாட்டின் 45ஆவது அதிபராகவும் இப்போது 47ஆவது அதிபராகவும் தம்மைத் தேர்வுசெய்துள்ள அமெரிக்க மக்களுக்கு டிரம்ப் நன்றிகூறிக்கொண்டார்.
“இது உண்மையிலேயே அமெரிக்காவின் பொற்காலமாக இருக்கும்,” என்றார் 78 வயதான டிரம்ப்.
“யாரும் செய்யாததை நாங்கள் செய்வோம். ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்ததும் வரிகளைக் குறைப்போம். நம் எல்லைகளை வலுப்படுத்துவோம். ராணுவத்துக்கு வலிமை சேர்ப்போம். நாட்டு மக்களுக்கு ஜனநாயக உரிமையையும் சுதந்திரத்தையும் அளிப்போம். நாம் இணைந்து இந்த இலக்கை அடைவோம். நாட்டின் எதிர்காலத்தை வளப்படுத்தி, அதனைப் பாதுகாப்போம்,” என்று டிரம்ப் பேசினார்.
உலகின் மிக முக்கியப் பணி இது எனக் குறிப்பிட்ட அவர், அதன் காரணமாகத்தான் இறைவன் தன் உயிரைக் காத்தார் என நினைக்கிறேன் என்றும் சொன்னார்.
அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது டிரம்ப்பைக் கொல்ல இருமுறை முயற்சி மேற்கொள்ளப்பட்டது நினைவுகூரத்தக்கது.
ஜனநாயகக் கட்சி சார்பில் கமலா ஹாரிசும் குடியரசுக் கட்சி சார்பில் டிரம்ப்பும் போட்டியிட்ட இந்தத் தேர்தலில் கடும் போட்டி நிலவியது.
செவ்வாய்க்கிழமை (நவம்பர் 5) வாக்குப்பதிவு நடந்தது. அதனைத் தொடர்ந்து, வாக்குகள் எண்ணப்பட்டன.
சிங்கப்பூர் நேரப்படி நேற்றிரவு 8 மணி நிலவரப்படி, இண்டியானா, கென்டக்கி, ஃபுளோரிடா, அலபாமா, டென்னசி, மிசோரி, ஒக்லஹோமா, மேற்கு வெர்ஜீனியா உள்ளிட்ட மாநிலங்களில் டிரம்ப் வெற்றிபெற்றிருந்தார்.
அத்துடன், அவர் 279 தேர்வாளர் குழு (electoral college) வாக்குகளையும் பெற்றிருந்தார். மொத்தமுள்ள 538 தேர்வாளர் குழு வாக்குகளில் குறைந்தது 270 வாக்குகளைப் பெறுவதே வெற்றிக்குப் போதுமானது.
கமலா ஹாரிஸ் 223 தேர்வாளர் குழு வாக்குகளைப் பெற்றிருந்தார். அவர் கலிஃபோர்னியா, ஓரகன், வாஷிங்டன், நியூயார்க், வெர்மான்ட், நியூ ஹேம்ப்ஷய், மேசசூசெட்ஸ், மேரிலேன்ட், இல்லினாய் உள்ளிட்ட மாநிலங்களில் வெற்றிபெற்றார்.
மேடையில் வெற்றியுரை ஆற்றியபோது, டிரம்ப்பின் மனைவி மெலானியா, குடியரசுக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் ஜே.டி. வான்ஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தனது பிரசாரக் குழுவில் முக்கியப் பங்காற்றிய, உலகப் பணக்காரர்களில் ஒருவரான எலோன் மஸ்க் பற்றிக் குறிப்பிட்ட டிரம்ப், அவரைக் குடியரசுக் கட்சியின் ‘புதிய நட்சத்திரம்’ என்றும், அவர் ஒரு மிகச்சிறந்த மனிதர் என்றும் புகழ்ந்தார்.
இதனிடையே, “அமெரிக்க அரசியல் வரலாற்றில் ஆகச் சிறந்த மறுஎழுச்சி இது,” எனக் குறிப்பிட்டுள்ளார் ஜே.டி. வேன்ஸ்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள டிரம்ப்பிற்குப் சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பிரெஞ்சு அதிபர் இம்மானுவல் மெக்ரோன், பிரட்டிஷ் பிரதமர் கியர் ஸ்டார்மர், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு, பிலிப்பீன்ஸ் அதிபர் ஃபெர்டினாண்ட் மார்க்கோஸ் ஜூனியர், உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி உள்ளிட்ட தலைவர்களும் டிரம்ப்பிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.