நாடாளுமன்றத் தேர்தலிலும் மக்களை ஏமாற்றி வாக்குப் பெற அநுர முயற்சி! – தமிழரசின் யாழ். மாவட்ட வேட்பாளர் பிரகாஷ் குற்றச்சாட்டு.
“ஊழலை ஒழிப்போம், ஊழல்வாதிகளைச் சட்டத்தின் முன் நிறுத்துவோம், எமது ஆட்சியில் ஊழல்வாதிகளுக்கு இடமில்லை என்று வீர முழக்கம் செய்து ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற அநுரகுமார திஸாநாயக்க, நாடாளுமன்றத் தேர்தலிலும் மக்களை ஏமாற்றி வாக்குப் பெற எண்ணுகின்றார். அதற்குத் தமிழ் மக்கள் பலிக்கடாவாகக் கூடாது. தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்துவிட்டு, பின் குத்துது, குடையுதென்று கூறுவதில் பயனில்லை.”
இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளரும் வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமாகிய தியாகராஜா பிரகாஷ் தெரிவித்தார்.
யாழ். சங்குவேலி, மானிப்பாயில் நேற்று புதன்கிழமை மாலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
“அநுர அரசின் உண்மை முகம், அவர் ஜனாதிபதியாகப் பதவியேற்று இரண்டு மாதங்களுக்குள்ளேயே தெள்ளத் தெளிவாகத் தெரிய ஆரம்பித்துள்ளது. ஜே.வி.பியின் ஸ்தாபகத் தலைவர் ரோஹண விஜயவீரவின் மகனே, தேசிய மக்கள் சக்திக்கு ஒருபோதும் மூன்றில் இரண்டு வீதப் பெரும்பான்மை நாடாளுமன்றத்தில் கிடைக்கக்கூடாது, கிடைத்தால் நாடு தாங்காது என்று எச்சரித்திருக்கின்றார்.
நாங்கள் தமிழர்கள். எமது பிரச்சினை தொடர்பில் சிந்திப்போம். எமக்கு ஊழலை ஒழிப்பது, நேர்மையான ஆட்சி போன்ற விடயங்கள் இரண்டாம் பட்சமே. அது சிங்கள மக்களுக்குத் தேவையான ஒன்று.
தமிழர்கள் இந்த நாட்டில் இரண்டாம் தரப் பிரஜைகள் என்ற நிலை முதலில் மாற வேண்டும். எமது இனத்தின் தாயகம், தேசியம், சுயநிர்ணயம் போன்றவற்றுக்காக ஆயிரமாயிரம் இளைஞர்கள் இந்த மண்ணில் காவுகொள்ளப்பட்டார்கள். அவர்கள் எதற்காக ஆயுதம் தூக்கிப் போராடினார்கள்? ஊழலற்ற ஆட்சி வேண்டும் என்றா? இல்லை. இங்கு அரசியல் ஞானம் அறவே அற்ற சிலர், தென்னிலங்கை மாயைக்குள் அகப்பட்டு, மாற்றம் வேண்டும், மாற்றம் வேண்டும் என்று மக்களைத் தவறான வழியில் திசைதிருப்புகின்றார்கள்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்போது அமைச்சர் விஜித ஹேரத், சமஷ்டி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று திட்டவட்டமாக அறிவித்துவிட்டார். சிங்களவர் விரும்புகின்ற ஒரு நாட்டுக்குள்ளே உள்ளக சுயநிர்ணய அடிப்படையிலான – ஆகக் குறைந்த பட்சத் தீர்வான சமஷ்யைக் கூட பேச்சுக்கே இடமில்லை என்று பகிரங்கமாக அறிவிக்கின்ற இந்த அரசை நம்பித் தமிழ் மக்கள் எவ்வாறு பின்செல்வது? தமிழ் மக்களுக்கு அவ்வாறு பகிரங்கமாகவே அறிவித்துவிட்டு, இங்குள்ள சிலரைப் பிடித்து எமது மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காகத் தமிழ் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளார்கள். அவர்களும் தமிழர்கள் அமைச்சராகலாம் என்ற பசப்புவார்த்தை கூறி எமது மக்களை ஏமாற்றி தமது பதவிகளுக்காக வாக்குக் கேட்கின்றார்கள்.
ராஜபக்ஷக்கள் கம்பனி செய்ததைத்தான் இவர்கள் செய்கின்றார்கள். உள்ளடக்கம் ஒன்றுதான். உருவம்தான் வேறு. ராஜபக்ஷக்கள் அமைச்சில் டக்ளஸுக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவி வழங்கினார்கள். மஹிந்த ஆட்சிக் காலத்தில் இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அமைச்சராகவும், கோட்டா காலத்தில் கடற்றொழில் நீரியல் வள அமைச்சராகவும் டக்ளஸ் இருந்தார். சந்திரிகாவின் ஆட்சிக் காலத்திலும் அமைச்சராக அவர் கடமையாற்றியுள்ளார்.
சரி, பிழைகளுக்கு அப்பால், டக்ளஸ் எமது இன விடுதலைக்காக ஆயுதம் ஏந்திய ஒரு போராளி. அவர் தேர்தல்களில் தனது தமிழ்க் கட்சியிலேயே போட்டியிட்டார். ஆனால், இவர்கள் அவ்வாறானவர்கள் அல்லர். சிங்களக் கட்சிக்கு வாக்குப் பெற்றுக்கொடுப்பதற்காகப் போட்டியிடுகின்றனர். அந்த அணியில் ஒரு வைத்தியரும் கூட கேட்கின்றார். அவர் எமது மக்களை முட்டாள்கள் என்று எண்ணி தனக்கு சுகார அமைச்சுக் கிடைக்கும் என்று கூறித்தான் மனப்பால் குடித்து, எமது மக்களையும் முட்டாள்கள் ஆக்குகின்றார்.
அமைச்சுப் பதவிக்காகவா எமது இனம் செங்குருதியில் தோய்ந்தது. இவர்களுடன் ஒப்பிடும்போது டக்ளஸ் மேலானவர். அவர் தனது கட்சியில் – பின்னர் தடம்மாறிச் சென்றிருந்தாலும் இன விடுதலைக்காக ஆயுதம் ஏந்தி எமது மக்களுக்காகப் போராடிய ஒரு கட்சியில் தேர்தலில் நின்றார். அமைச்சுப் பதவியைப் பேரம் பேசி பெற்றார். அவர் முன்பு ஒரு விடயத்தை அடிக்கடி கூறுவார். நாடாளுமன்றத்தில் அரச தீர்மாணங்களுக்கு ஆதரவாகக் கை உயர்த்தினால்தான், நாம் ஆளும் தரப்பிடம் கைநீட்டி அபிவிருத்திகளைப் பெறலாம் என்றார். ஆனால், இங்கு எதுவும் பேசாமல் ஆளும் கட்சியில் இருக்கின்றோம் என்ற ஒரு காரணத்துக்காக கை உயர்த்தவிருக்கின்றவர்களை – சிங்களக் கட்சிக்கு – நீங்கள் வாக்களிப்பீர்களாயின் அது டக்ளஸூக்கு வாக்களிப்பதிலும் விட இழிநிலையானது.
அடுத்து பனை அபிவிருத்திச் சபை தலைவர் விடயத்தைப் பாருங்கள். ஆட்சிக்கு வந்தவுடன் செல்வின் என்ற நேர்மையானவரை நியமித்தார்கள். பின் திடுதிப்பென அவரை மாற்றி ஊழல் பேர் வழி என்று சமூகத்தால் அறியப்பட்ட விநாயகமூர்த்தி சகாதேவன் என்பவரை நியமித்திருக்கின்றார்கள். இன்று யாழ்ப்பாணத்தில் பனை அபிவிருத்திச் சபை ஊழியர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்துக்காகக் கைதடியில் வீதியில் இறங்கியுள்ளார்கள்.
அரசின் இந்தச் செயற்பாடு வடக்குக்கு ஊழல் ஒழிப்பும் இல்லை என்பதையே காட்டுகின்றது. மாற்றம் தெற்குக்குத்தான். வடக்குக்கு இல்லை என்பது இதிலிருந்து புலனாகின்றது.
ஆகவே, தமிழ் மக்கள் போலிகளைக் கண்டு ஏமாறக்கூடாது. தென்னிலங்கை மக்கள் கோட்டாவை விரட்டியடித்தபோது, அவரைக் கொண்டு வந்ததில் எமக்குப் பங்கில்லாதமையால் நாம் வேடிக்கை பார்த்தோம். அநுர அரசுக்கு நாம் வாக்களித்துப் பங்காளியாகினோம் என்றால் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களாக வடக்கு தமிழர்களின் வீடுகளை எரிக்கும் நிலையும் ஒருகாலத்தில் ஏற்படலாம்.
நாம் வழமை போன்று வேடிக்கை பார்க்க வேண்டும் என்றால் நாம் சரியாக எமது இனம் சார்ந்து செயற்படுகின்ற இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கே வாக்களித்தால் நாம் சரியாகத்தான் தெரிவு செய்தோம் என்று இரத்தக் கொதிப்பு ஏற்படாமல் புத்திசாதுர்யமாக நடந்தார்கள் தமிழர்கள் என்ற கர்வத்துடன் வேடிக்கை பார்க்கலாம். நான் இதை ஏன் தெரிவிக்கின்றேன் என்றால், அநுரகுமார அரசு தமக்குத் தொழிற்சங்கங்களைப் பாவித்துவிட்டு, தற்போது அனைத்தையும் கலைப்பதாக முடிவு செய்துள்ளது. அவர்கள் ஏதோ தவறிழைக்க உள்ளார்கள் என்பது இதிலிருந்து புலனாகின்றது.” – என்றார்.