பத்து பேருடன் பலமான அணியாக நாடாளுமன்றத்துக்குச் செல்வோம்! – தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ சூளுரை.
பத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் எமது அணி, எதிர்வரும் பத்தாம் நாடாளுமன்றத்தில் ஒரு அழுத்த அணியாக இடம்பெற வேண்டும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மனோ விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:-
“தமிழ் முற்போக்குக் கூட்டணி, பதுளை, நுவரெலியா, கண்டி, இரத்தினபுரி, கேகாலை, கொழும்பு, கம்பஹா ஆகிய ஏழு மாவட்டங்களில் பத்து வேட்பாளர்களைக் களமிறக்கியுள்ளது. இந்தப் பத்து வேட்பாளர்களும் வெல்ல வேண்டும்.
எம்மை நாமே பிரதிநிதித்துவம் செய்ய வேண்டும். இந்த நாடு இன்று ஒரு வரலாற்று திருப்பு முனையில் நிற்கின்றது. இந்த வரலாற்றுச் சூழலில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் நாம் நமது மக்களை பிரதிநிதித்துவம் செய்ய வேண்டும். வரலாறு தந்திருக்கும் வாய்ப்பை நாம் தவற விடகூடாது.
ஏதோ வானத்தில் இருந்து இறங்கி வந்த கௌதம புத்தனைப் போல் பேசுகின்ற நபர்களை நான் என் அரசியல் வாழ்வில் பலமுறை பார்த்து இருக்கிறேன். இப்போதும் பார்க்கிறேன். இந்த பசப்பு வார்த்தைகளில் நமது மக்கள் ஏமாந்து விட கூடாது. உண்மையில் நாம் இன்று சந்திக்கும் பல்வேறு துன்பங்களுக்கு இன்று தேனொழுக பேசும் இவர்கள்தான் முதல் காரணம். ஆகவே, இவர்கள் எப்படி எம்மைப் பிரதிநிதித்துவம் செய்ய முடியும்? எம்மை நாம்தான் பிரதிநிதித்துவம் செய்ய வேண்டும்.
ஆகவே ஏழு மாவட்டங்களில் போட்டியிடும் எமது பத்து வேட்பாளர்களும் வெற்றி பெற்று, எதிர்வரும் பத்தாம் நாடாளுமன்றத்தில் நாம் ஒரு அழுத்த அணியாக இடம் பெற வேண்டும். இதை மனதில்கொண்டு நமது மக்கள் வாக்களிக்க வேண்டும்.
இந்த நாடு இன்று ஒரு வரலாற்றுத் திருப்பு முனையில் நிற்கின்றது. நாடு எழுச்சியும் பெறலாம். வீழ்ச்சியும் அடையலாம். இவற்றைப் பெரும்பாலும் பெரும்பான்மை மக்கள் தெரிவு செய்யும் பெரும்பான்மை கட்சிகளே தீர்மானிக்கப் போகின்றன.
இந்தச் சூழலில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் நாம் நமது மக்களை பிரதிநிதித்துவம் செய்ய வேண்டும். எம் தேவைகள் பற்றி, எம் இருப்பு பற்றி, எம் அபிலாஷைகள் பற்றி, நாம்தான் பேச வேண்டும். குரல் கொடுக்க வேண்டும். இன்று தேனொழுகப் பேசும் வேறு எவரும் எம்மைப் பற்றி பேச மாட்டார்கள். உண்மையில் நாம் இன்று சந்திக்கும் பல்வேறு துன்பங்களுக்கு இன்று தேனொழுக பேசும் இவர்கள்தான் முதல் காரணம்.
ஆகவே, பதுளை, நுவரெலியா, கண்டி, இரத்தினபுரி, கேகாலை, கொழும்பு, கம்பஹா ஆகிய ஏழு மாவட்டங்களில் தொலைபேசி சின்னத்தில் போட்டியிடும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பத்து வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யும் முகமாக வாக்களிக்கும்படி மக்களை வேண்டுகின்றேன்.” – என்றுள்ளது.