தெலுங்கு சமூகத்திற்குப் பெருமை சேர்க்கும் தருணம்: உஷா வேன்சுக்கு ஆந்திர முதல்வர் வாழ்த்து.

அமெரிக்க அதிபர் தேர்தலில் துணை அதிபராக ஜே.டி.வேன்ஸ் வெற்றி பெற்றதற்கு ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அமெரிக்காவின் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜே.டி.வேன்சுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த வெற்றியின் மூலம் வேன்சுவின் மனைவியும் ஆந்திராவைப் பூர்வீகமாகக் கொண்டவருமான உஷா வேன்சை அமெரிக்காவின் இரண்டாவது பெண்மணியாக மாற்றியுள்ள வரலாற்றுத் தருணம் நிகழ்ந்துள்ளது,” எனச் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

“அமெரிக்காவின் இரண்டாவது பெண்மணியாகப் பணியாற்றும் முதல் தெலுங்கு பாரம்பரிய பெண் என்ற பெருமையைத் திருவாட்டி வேன்ஸ் பெற்றிருக்கிறார். உலகெங்கிலும் உள்ள தெலுங்கு சமூகத்தினர் அனைவருக்கும் பெருமை சேர்க்கும் தருணம் இது. ஜே.டி.வேன்ஸ் – உஷா வேன்ஸ் தம்பதியை ஆந்திராவுக்கு வருமாறு அழைக்கும் வாய்ப்பினை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்,” என அந்தப் பதிவில் மேலும் அவர் கூறியுள்ளார்.

அமெரிக்க துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஜே.டி.வேன்சின் மனைவி உஷா மற்றும் அவரது குடும்பத்தினர் ஆந்திராவைப் பூர்வீகமாக கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக டோனல்ட் டிரம்ப்புக்கு வாழ்த்துகள் கூறிய ஆந்திர முதல்வர், இந்தியப் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகிய இருவரின் தலைமையில் இரு நாடுகளும் அதிக ஒத்துழைப்பை வளர்க்கும் என்று நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

மேலும், “டிரம்பின் வெற்றியால் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவு மேலும் வலுப்படும். டிரம்ப் கூறியது போல் தனது நாட்டை முன்னோக்கி வழிநடத்தத் தயாராகி வருகிறார். அந்த முயற்சியில் வெற்றி பெற வாழ்த்துகள். அவரது முதல் பதவிக்காலத்தில் இந்திய-அமெரிக்க கூட்டுறவு வலுவாக இருந்தது,” என்றார் ஆந்திர முதல்வர்.

Leave A Reply

Your email address will not be published.