இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல்; மீட்புக்கு நெதர்லாந்திற்குப் பறந்த மீட்பு விமானங்கள்.
நெதர்லாந்துத் தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இஸ்ரேலியக் காற்பந்து ரசிகர்கள்மீது வியாழக்கிழமை (நவம்பர் 7) இரவு தொடர் தாக்குதல் அரங்கேறியது.
இதனையடுத்து, அவர்களைப் பாதுகாக்க கலவரத் தடுப்புக் காவல்துறையினர் பலமுறை களத்தில் இறங்க வேண்டியிருந்தது.
‘செமிட்டிக் இனத்தவர்க்கு எதிரான தாக்குதல்’ எனக் குறிப்பிட்டு, அதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளார் டச்சுப் பிரதமர் டிக் ஸ்கோஃப்.
இஸ்ரேலியர்களுக்கு எதிரான மோசமான வன்முறைச் சம்பவங்கள் என இஸ்ரேலிய ராணுவம் அதனை விவரித்தது. அதனைத் தொடர்ந்து, ஆம்ஸ்டர்டாமுக்கு இரண்டு மீட்பு விமானங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு தெரிவித்துள்ளார்.
ஏராளமான காவல்துறையினர் இருந்தபோதும், நகரின் பல பகுதிகளிலும் இஸ்ரேலியக் காற்பந்து ரசிகர்கள் தாக்கப்பட்டதாக ஆம்ஸ்டர்டாம் நகர மேயரும் அதிகாரிகளும் கூறினர்.
டச்சுக் காற்பந்துக் குழு அயக்சுக்கு எதிரான யூரோப்பா லீக் போட்டியில் விளையாடுவதற்காக இஸ்ரேலின் மெக்காபி டெல் அவிவ் குழு ஆம்ஸ்டர்டாம் சென்றிருந்தது. அந்த ஆட்டத்தில் அயக்ஸ் குழு 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
போட்டி தொடங்குவதற்கு முன்பே மெக்காபி குழு ரசிகர்களும் பாலஸ்தீன ஆதரவாளர்களுக்கும் மோதிக்கொண்டனர் என்றும் கைது நடவடிக்கைகள் இடம்பெற்றன என்றும் காவல்துறை தெரிவித்தது.
இதுவரை 57 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை கூறியது.
ஆம்ஸ்டர்டாமில் அரங்கேறிய வன்முறையைத் தொடர்ந்து, இஸ்ரேலியப் பிரதமர் நெட்டன்யாகுவைத் தொடர்புகொண்ட டச்சுப் பிரதமர் ஸ்கோஃப், குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுவர் என்று அவரிடம் உறுதியளித்ததாகவும் கூறினார்.
கலவரத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்பது தெளிவாகத் தெரியாவிடினும், அவர்கள் அடர்நிற ஆடை அணிந்திருந்ததாகக் காவல்துறை தெரிவித்தது.
தாக்குதல்கள் தொடர்பில் பல காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.