வடக்கில் திடீர் கோடீஸ்வரர்களான தமிழ் இசைக்குழுவை சேர்ந்த மூவர் கைது.

யாழ்ப்பாணத்தில் திடீரென கோடீஸ்வரர்களாக மாறிய தமிழ் இசைக்குழுவை சேர்ந்த மூவர் கோப்பாய் பொலிஸாரால் நேற்று (7) கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த வருடம் மூன்று பாடகர்கள் ஒன்றிணைந்து இசைக் குழுவை உருவாக்கி அவர்களின் வங்கிக் கணக்கில் கோடிக்கணக்கான ரூபாய் பணம் வரவு வைக்கப்படுவதை வவுனியா பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் அவதானிக்க முடிந்தது.

மற்றுமொரு முறைப்பாட்டின் பேரில் வவுனியா பொலிஸாரின் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்ட போது இந்த மூன்று பாடகர்களும் பல கோடி ரூபா பெறுமதியான பணத்தை பெற்றுக்கொண்டமை கண்டுபிடிக்கப்பட்டது. பாடகர்கள் மூவரில் ஒருவர் வவுனியாவிலும், இருவர் யாழ்ப்பாணத்திலும் உள்ளதால், இது தொடர்பில் வவுனியா பொலிசார் , கோப்பாய் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். பொலிசார் நடத்திய விசாரணையில், இந்த மூன்று பாடகர்களும் மிகக் குறுகிய காலத்தில் கோடீஸ்வரர்களாக மாறியுள்ளதால், இது தொடர்பான விசாரணைக்காக அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த 3 பேரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்களின் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டதற்கான காரணங்களையோ, பணம் வரவு வைத்தவர்களின் முழு விவரங்களையோ தெரிவிக்க அவர்கள் தவறியுள்ளனர். இதன்காரணமாக யாழ்.நீதிமன்றத்தில் பெறப்பட்ட தடுப்புக்காவல் உத்தரவின் அடிப்படையில் பொலிசார் மூவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.