ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியே அதிகமான ஆசனங்களைக் கைப்பற்றும் – இப்படி சிவசக்தி ஆனந்தன் நம்பிக்கை.
“வன்னியில் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியே பலமான கட்சியாகப் போட்டியிடுகின்றது. அதுவே அதிக ஆசனங்களைக் கைப்பற்றும்.”
இவ்வாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளருமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.
வவுனியாவில் இன்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“வன்னியில் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியானது இங்கு போட்டியிடுகின்ற கட்சிகளை விட அதிகூடிய வாக்குகளைப் பெற்று மூன்று ஆசனங்களைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு இருக்கின்றது.
இன்று தேர்தல் களத்தில் உள்ள கட்சிகளில் பலமான கட்சியாகவும், கூட்டணியாகவும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியே உள்ளது. கடந்த காலங்களில் அனைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகப் பயணித்த அந்தக் கட்சி இன்று நிலைகுலைந்து சின்னாபின்னமாக்கப்பட்டுள்ளது.
அந்தநிலையில் தமிழ் மக்களுக்காக இன்று இருக்கக்கூடிய மாற்றுத் தெரிவு ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியே. மக்களின் பல பிரச்சினைகள் இங்கு தீர்க்கப்படவில்லை. தங்களின் பிரச்சினைகளைத் தீர்க்க எந்தவொரு தரப்பும் முன்வரவில்லை என்று பொதுமக்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.
புதிய அரசு சோசலிசம், சமத்துவம் என்ற கொள்கையை முன்னிறுத்தி ஆட்சியை முன்னெடுக்கின்றது. இது சிங்கள மக்களுக்குப் பொருத்தமாக இருக்கும். இது தமிழ் மக்களுக்குப் பொருத்தமில்லாத ஒன்று.
எமக்கு நீண்டகாலப் பிரச்சினை உள்ளது. சுயநிர்ணய உரிமைக்காகத் தொடர்ச்சியாக எமது மக்கள் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். எனவே, இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நடைமுறைக்கு சாத்தியமான ஒரு விடயத்தை அரசு முன்னெடுக்க வேண்டும்.” – என்றார்.