தமிழ்த் தேசியத்துக்கே தவறாது வாக்களியுங்கள் – தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கம் வலியுறுத்து.

“தமிழ்த் தேசியத்துக்கு வாக்களியுங்கள்!” – என்று தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கம் தமிழ் மக்களைக் கோரியிருக்கின்றது.

இது தொடர்பாக அந்த இயக்கத்தின் தலைவர் வி.எஸ். சிவகரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதன் விவரம் வருமாறு:-

‘மாற்றம்’, ‘ஊழலற்ற புதிய அரசியல் கலாசாரத்தை கட்டமைப்போம்’, ‘இலங்கையராக ஒன்றிணைவோம்’ எனக் கவர்ச்சிகரமாக பன்மத்துவ இலங்கைத் தேசியவாதம் பேசி, முற்போக்கு இடதுசாரிச் சிந்தனைத்துவ ஆட்சிக் கட்டமைப்பு என வெற்றுக் கோஷத்தையும், போலி முகமூடியையும் அணிந்து கொண்டு ஜே.வி.பி. தனது இனவாதக் கோர முகத்தை தேசிய மக்கள் சக்தி எனும் கவசத்துக்குள் திரையிட்டு மறைக்க முனைகின்றது.

இலங்கையில் பௌத்த தேசியவாத இனவாதத்தை சிங்கள மக்கள் மத்தியில் விதைத்ததில் பெரும் பங்கு ஜே.வி.பிக்கு உண்டு.

2002 ஆம் ஆண்டு சமாதான உடன்படிக்கைக்கு எதிராக இனவாத கோஷத்தை முன்வைத்து குழப்பியதில் இன்றைய ஜனாதிபதிக்கும் பெரும் பங்கு உண்டு. இவர்கள் ஒன்றும் மீட்பர்கள் அல்லர். பல மீட்பர்களை நாம் பார்த்து விட்டோம்.

ஒரு மாதத்திலேயே ஆட்சி கலகலத்து போய்விட்டது. ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் வழங்கிய எந்த வாக்குறுதியையும் இதுவரை நிறைவேற்றவில்லை. தேர்தல் காலத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சலுகையாக வழங்கப்பட்ட மதுபானச்சாலை அனுமதிக்குரிய பெயர் விவரங்களை வெளியிடுவதாகக் கூறினார்கள். வெற்றி பெற்றதும் உடனடியாக இரத்துச் செய்யவுள்ளனர் எனவும் தெரிவித்தனர். ஒரு சிலருடைய பெயரை மட்டுமே வெளியிட்டவுடன் அமைதியாகிவிட்டனர். தூய வாதம் பேசியவர்கள் பனை அபிவிருத்தி சபையின் தலைவர் தெரிவில் இவர்களின் போலி ஊழல் ஒழிப்பு வாதம் என்பதற்கு இதுவே பெரும் சாட்சி.

தமிழர்கள் மத்தியில் படித்தவர்கள் எனச் சொல்பவர்கள் தமது சுயநலத்துக்காக மாற்றம் எனும் கோஷத்தை முன்னிறுத்துகின்றனர். அவர்களால் தமிழினத்துக்கு எந்த மாற்றமும் நிகழ்ந்து விடாது. தேர்தல் வரலாற்றில் என்றும் இல்லாதது போல் எண்ணற்ற கட்சிகளும், சுயேச்சைக் குழுக்களும் களத்தில் உள்ளன. வெளிநாட்டுப் பண முகவர்களும் புலம்பெயர்ந்த தேசத்தவர்களும் பெரும் செல்வாக்குச் செலுத்துகின்றனர்.

கடந்த 15 ஆண்டுகளாக தமிழ்த் தேசியக் கட்சிகள் தமக்குள் மோதுண்டு பல அணிகளாகப் பிரிந்து நின்றாலும் தமிழ்த் தேசியம் எனும் கோட்பாட்டுச் சித்தாந்தத்தை நாம் இழக்க முடியாது. இன்றைய தமிழ்த் தேசியக் கட்சிகளும் அதில் உள்ள நபர்களும் சோரம் போகலாம். ஆனால், தமிழ்த் தேசியம் எனும் உயரிய இலக்கில் இருந்து நாம் ஒவ்வொரு சாதாரண குடிமகனும் உள்ளத்தால் கூட மாற்றிச் சிந்திக்க முடியாது.

இன விடுதலை அரசியலுக்காக நாம் இழந்தவை அதிகம். இன்னும் இழப்பவை அதிகமாக இருந்தாலும் நாம் தமிழ்த் தேசியத்தைக் கடந்து கடுகளவும் நகர முடியாது. அது வரலாற்றுத் தவறாக மாறிவிடும். கடந்த காலத்தில் வினைத்திறனற்று செயற்பட்ட மக்கள் பிரதிநிதிகளை நிராகரியுங்கள். பணத்துக்கோ, பதவிக்கோ, சலுகைக்கோ, சமயத்துக்கோ, சாதியத்துக்கோ, சாராயத்துக்கோ, அபிவிருத்திக்கோ வாக்களிக்க முயலாதீர்கள்.

நான் ஏன், எதற்கு உங்களுக்கு வாக்களிக்க வேண்டும்? எனும் கேள்வியை ஒவ்வொரு வாக்காளனும் மனதில் நிறுத்திக்கொள்ளுங்கள். உங்களை யார் ஆள வேண்டும் எனும் உரிமையை அற்ப நபர்களுக்கு விற்றுவிடாதீர்கள்.

நாங்கள் நாங்களாகவே இருப்போம். எதற்காகவும் தமிழ்த் தேசியத்தை நிராகரிக்க முனையாதீர்கள். உங்கள் வாக்கு தடம் மாறாத இருப்பைத் தனதாக்கக்கூடிய தமிழ்த் தேசியக் கட்சிகளுக்காக இருக்கட்டும். எமக்குள் உள்ள உட்பகையை நாமே தீர்த்துக் கொள்ளலாம். எதிரிக்கு எந்த வாய்ப்பும் வழங்கி விடாதீர்கள். தேசம் பறிபோய் விட்டது. தேசியத்தையாவது எமதாக்கிக் கொள்வதற்காக தேசிய உணர்வோடு வாக்களியுங்கள். அதுவே நாம் இந்த இனத்துக்கும் இந்தத் தேசத்துக்கும் செய்யும் பாரிய அர்ப்பணிப்பும் தியாகமும் ஆகும். – என்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.