ரிஷாத் – மஸ்தான் முரண்பாடு! கலவரமாகிய பிரசாரக் கூட்டம்!! – அடித்துநொறுக்கப்பட்டன வாகனங்கள்.
வவுனியா, பட்டாணிச்சூர் பகுதியில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தானின் பிரசாரக் கூட்டம் இடம்பெற்ற பகுதியில் ஏற்பட்ட குழப்ப நிலையில் இருவர் காயமடைந்தனர். அத்துடன் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனும், அவரது ஆதரவாளர்களும் பயணித்த வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
வவுனியா, பட்டாணிச்சூர் பகுதியில் பிரதான வீதிக்கு அருகாக நேற்று திங்கட்கிழமை இரவு 8 மணியளவில் காதர் மஸ்தானின் பிரசாரக் கூட்டம் இடம்பெற்றது. இதன்போது அந்தப் பகுதிக்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த சிலர் பிரசாரக் கூட்டத்தைப் பார்த்துக் கூச்சலிட்டுச் சென்றிருந்தனர்.
சற்றுநேரத்தில் அந்த மோட்டார் சைக்கிள்களுக்குப் பின்னால் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனும், அவரது ஆதரவாளர்களும் பயணித்த வாகனத் தொடரணிகள் கூட்டம் இடம்பெற்றுக்கொண்டிருந்த பகுதிக்கு அருகே உள்ள பிரதான வீதிக்கு வந்தது.
இதனால் இரண்டு தரப்பு ஆதரவாளர்களுக்கும் இடையில் குழப்பநிலை ஏற்பட்டதுடன் சற்றுநேரத்தில் அது கலவரமாகியது.
இந்தக் கலவரத்தில் ரிஷாத் பதியுதீன் பயணித்த வாகனம் அடித்து நொறுக்கப்பட்டது. அவரது ஆதரவாளர்களின் வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டன.
இந்தத் தாக்குதலையடுத்து அந்த வாகனத் தொடரணி அந்தப் பகுதியில் நிறுத்தாமல் வேகமாகச் சென்றது.
சம்பவ இடத்துக்கு வருகை தந்த பொலிஸார் நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையை எடுத்தனர்.
சம்பவத்தில் காயமடைந்த இருவர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டனர்.