பாலஸ்தீனர்களுக்கு எதிராக இஸ்ரேல் ‘இனப் படுகொலை’ செய்ததாக சவூதி அரேபிய பட்டத்து இளவரசர் கண்டனம்.
பாலஸ்தீனர்களுக்கு எதிராக இஸ்ரேல் ‘இனப் படுகொலை’ செய்ததாக சவூதி அரேபிய பட்டத்து இளவரசர் முகம்மது சல்மான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சவூதி தலைநகர் ரியாத்தில் திங்கட்கிழமை (நவம்பர் 11) நடந்த முஸ்லிம், அரபு நாட்டுத் தலைவர்களின் உச்சநிலைச் சந்திப்பின்போது உரையாற்றிய அவர் இதனைக் கூறினார்.
“சகோதரத்துவ பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் செய்த இனப் படுகொலைக்கு சவூதி மீண்டும் கண்டனம் தெரிவிக்கிறது,” என்றார் பட்டத்து இளவரசர்.
அக்டோபரில் இறுதியில் சவூதி வெளியுறவு அமைச்சர் ஃபைசல் ஃபர்ஹான் அல் சவுட், இஸ்ரேலின் செயலுக்குக் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஈரானை இஸ்ரேல் தாக்குவதை நிறுத்தக் கோரி உலக நாடுகளுக்கு அறைகூவல் விடுத்த பட்டத்து இளவரசர், ஈரானின் இறையாண்மையை மதிக்கும்படி கேட்டுக்கொண்டார்.
பாலஸ்தீனம் தனி நாடாக அங்கீகரிக்கப்பட்டால் ஒழிய, இஸ்ரேலை சவூதி அங்கீகரிக்காது என அவர் செப்டம்பரில் கூறியிருந்தார்.