அரசு மருத்துவர் மீதான தாக்குதலுக்கு விஜய் கண்டனம்!

சென்னை, கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் புற்றுநோய் பிரிவில் பணியாற்றும் அரசு மருத்துவர் பாலாஜியை, சிகிச்சை பெற்றுவரும் பிரேமா என்பவரின் மகன் கத்தியால் குத்தினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக அந்த நபர் கைது செய்யப்பட்டு போலீஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மருத்துவர் பாலாஜியை சந்தித்து நலம் விசாரித்தார். மேலும், குற்றச்சம்பவத்தில் ஈடுபட்ட நபர் மீது கடும் குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.

அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவரை ஒருவர் கத்தியால் குத்திய சம்பவத்திற்கு எதிர்க்கட்சி உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். அந்த வகையில் தவெக தலைவர் விஜய் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் பட்டப்பகலில் அரங்கேறும் குற்றச்செயல்கள் சட்டம் ஒழுங்கின் சீர்கேட்டையே காட்டுகிறது என்று எங்கள் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் வாயிலாக கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், அரசு ஊழியர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் என யாருக்கும் பாதுகாப்பு இல்லாத ஆட்சியாக இந்த ஆட்சி உள்ளது என்பது தினம் தினம் நிகழும் குற்றச்செயல்களால் நிரூபணமாகிறது.

சென்னை கிண்டியில் உள்ள உயர் சிறப்பு அரசு மருத்துவமனையில், புற்றுநோய் மருத்துவர் பாலாஜி இன்று கத்தியால் குத்தப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உயிர்காக்கும் சிகிச்சை அளிக்கும் இதுபோன்ற அரசு உயர் சிறப்பு மருத்துவமனையில், அரசு மருத்துவரின் உயிருக்கே பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டு இருப்பதற்கு தமிழக அரசின் மெத்தனப்போக்கே காரணம். கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த மருத்துவர் பாலாஜி, விரைவில் பூரண குணமடைய பிரார்த்திக்கிறேன்.

காலம் நேரம் பார்க்காது கடுமையாக உழைக்கும் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் சட்டப்பூர்வமான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு முன்னெடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் தினந்தோறும் நிகழும் பல்வேறு குற்ற நிகழ்வுகள், பொதுமக்களிடையே அச்சத்தை உருவாக்கியுள்ளன. சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய ஆட்சியாளர்கள் இனியாவது விழித்துக்கொண்டு மக்களை பாதுகாக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.