டெல்லியில் தீவிரமடையும் காற்று மாசு காரணமாக தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்த முடிவு
டெல்லியில் காற்று மாசு காரணமாக தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அண்டை மாநிலங்களில் காய்ந்த பயிர்க்கழிவுகளை எரிப்பதாலும், வாகனப் பெருக்கத்தாலும் டெல்லியில் காற்றின் தரம் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த டெல்லி மற்றும் என்.சி.ஆர் பகுதிகளில் இன்று முதல், “நிலை 3” செயல் திட்டம் அமல்படுத்தப்படும் என்று காற்று தர மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, அத்தியாவசியமற்ற கட்டுமானம் மற்றும் கட்டட இடிப்பு நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்படுகிறது.
மின்சாரம், சிஎன்ஜி அல்லாத வெளிமாநில பேருந்துகளுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் தண்ணீர் தெளிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்று மாசு அதிகரித்து வருவதால் அடுத்த அறிவிப்பு வரும் வரை டெல்லியில் அனைத்து தொடக்கப்பள்ளிகளிலும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும் என்று டெல்லி முதலமைச்சர் அதிஷி அறிவித்துள்ளார்.
காற்று மாசை கட்டுப்படுத்த “நிலை 3” என்ற செயல் திட்டம் அமல்படுத்தப்படுவதைக் கருத்தில் கொண்டு, இன்று முதல் கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.