கேரளாவில் உள்ள வர்த்தக நிறுவனத்தில் நுழைய விடாமல் வெளியேற்றப்பட்ட இஸ்ரேல் தம்பதியினர்!

இஸ்ரேல் நாட்டை சேர்ந்த தம்பதியினரை கேரளாவில் உள்ள ஒரு வர்த்தக நிறுவனத்தில் நுழைய விடாமல் வெளியேற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சுற்றுலாத்தளமான தேக்கடியில் பல நாட்டை சேர்ந்தவர்கள் வந்து செல்வர். அங்கு காஷ்மீரை சேர்ந்த 2 பேர் தேக்கடியில் கைவினை பொருள் விற்கும் கடை நடத்தி வருகின்றனர். இஸ்ரேலை சேர்ந்த தம்பதியினர் ஆர்வமாக ஷாப்பிங் செய்ய வந்தபோது, அவர்கள் எந்த நாட்டினர் என கடைக்காரர் விசாரித்துள்ளார். இஸ்ரேல் என தெரிந்ததும் கடைக்குள் வர வேண்டாம், பாலஸ்தீன இஸ்லாமியர்களை உங்கள் நாடு சிரமப்படுத்துவதாக கூறி வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த இஸ்ரேல் தம்பதியினர், தாங்கள் பொருட்கள் வாங்க வந்திருப்பதாகவும், வேறுபாடு பார்க்காமல் நடந்து கொள்ளுமாறும் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கூடிய வியாபாரிகளும் இஸ்ரேல் தம்பதியினருக்கு ஆதரவுக் குரல் கொடுத்தனர்.

இதனை தொடர்ந்து கடைக்காரர்கள் இஸ்ரேல் தம்பதியரிடம் மன்னிப்பு கேட்டனர். சுற்றுலா பயணிகளை அவமதித்த கடை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க தேக்கடி வணிகர் சங்கம் முடிவு செய்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.