மணிப்பூரில் அடையாளம் தெரியாத 3 பெண்களின் உடல்கள் மீட்பு!

மணிப்பூரில் அடையாளம் தெரியாத 3 பெண்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.

மணிப்பூரில் மலைப் பகுதி மாவட்டமான ஜிரிபாமில், வெள்ளிக்கிழமையில் (நவ. 16) மூன்று பெண்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டது. அவர்கள் அடையாளம் தெரியாத நிலையில், மூவரின் உடல்களும் உடற்கூறாய்வு பரிசோதனைக்காக, 50 கி.மீ. தொலைவில் அஸ்ஸாமில் உள்ள சில்சார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

அதே சமயத்தில், திங்கள்கிழமை (நவ. 11) ஆயுதங்களுடன் புகுந்த குகி சமூகத்தினர், 3 பெண்களும் 3 குழந்தைகளும் உள்பட 6 பேரை கடத்திச் சென்றது குறிப்பிடத்தக்கது. எவ்வாறாயினும், உடற்கூறாய்வு அறிக்கை வெளியானவுடன்தான் தெரிய வரும் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஜிரிபாமில் திங்கள்கிழமையில் வன்முறையில் ஈடுபட்டிருந்த குகி சமூகத்தினர் மீது சிஆர்பிஎஃப் போலீஸார் தாக்குதல் நடத்தினர். இந்த நிலையில், தங்கள் பகுதியில் தீவிரவாதிகளுக்கும் போலீஸாருக்கும் இடையே தாக்குதல் நடப்பதாக, அப்பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர், தனது கணவருக்கு போனில் தகவல் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, சிறிது நேரத்திலேயே அவரது அழைப்பு துண்டிக்கப்பட்டது. அந்தப் பெண்ணை, அவரது கணவர் மீண்டும் அழைத்தபோது, மொபைல் ஸ்விட்ச் ஆஃப் என்று வந்துள்ளது.

இந்த நிலையில், அந்தப் பெண்ணின் தோழி ஒருவர், பெண்ணின் கணவரிடம் “உங்கள் மனைவியை குகி சமூகத்தினர் படகில் கடத்திச் செல்கின்றனர்’’ என்று கூறியுள்ளார். விசாரணையில், கடத்தப்பட்ட பெண், அவரது 2 குழந்தைகள் உள்பட வேறு 2 பெண்களும், மற்றொரு குழந்தையும் என மொத்தம் 6 பேர் கடத்தப்பட்டிருப்பது தெரிய வந்தது.

Leave A Reply

Your email address will not be published.