மணிப்பூர் மாநிலத்தில் காணாமல் போன 6 பேர் இறந்த நிலையில் சடலமாக மீட்பு!…மீண்டும் போராட்டக் களமாக மாறியுள்ளது
மணிப்பூர் மாநிலத்தில் காணாமல் போன 6 பேர் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு மீண்டும் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் 3ம் தேதி மெய்தி மற்றும் குக்கி ஆகிய இரு சமூகத்தினர் இடையே மோதல் உருவானது. இந்த மோதல் பெரும் கலவரமாக மாறி இரு தரப்பிலும் 200க்கும் மேற்பட்டோர் பலியாகினர். மேலும், பல்லாயிரக்கணக்கானோர் தங்களது வீடுகளை இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு இணையச் சேவை தடை செய்யப்பட்டது. பிறகு இணையச் சேவை கொடுத்த பிறகு, உலகமே அதிர்ச்சிக்குள்ளாகும் வகையில் இரு பெண்கள் ஆடைகள் அற்று சாலையில் இழுத்துச் செல்லப்பட்டு வன்கொடுமை செய்யப்பட்ட வீடியோ வெளியாகியது. அதுவே அந்த மாநிலத்தின் கோர நிலைமையை மக்களுக்குக் காட்டியது.
பிரேன் சிங் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடந்து வரும் மணிப்பூரில், மெய்தி மற்றும் குக்கி ஆகிய இரு சமூகங்களுக்கிடையே உருவான கலவரம், ஓராண்டைக் கடந்தும் நீடித்து வருகிறது. பல்வேறு தரப்பினரும் மத்திய அரசு தலையிட்டு பிரச்சனையை முடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.
மணிப்பூரில் ஏற்பட்ட கலவரம் கொஞ்சம் கொஞ்சமாக தணிந்து மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பி வந்தனர். ஆனாலும், ஆங்காங்கே வன்முறைச் சம்பவங்களும், தாக்குதல் சம்பவங்களும் மணிப்பூர் மாநிலத்தில் தொடர்ந்து வந்தது.
ஜிரிபாம் எனும் மாவட்டத்தில் கடந்த செப். 7ம் தேதி மீண்டும் ஒரு வன்முறைச் சம்பவம் அரங்கேறியது. இதில், 6 நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதன் காரணமாக மீண்டும் அங்கு பதட்ட நிலை உருவானது.
இதேபோல் கடந்த 11ம் தேதி, அதே ஜிரிபாம் மாவட்டத்தில் சிஆர்பிஎஃப் முகாமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பின்னர், பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதலில் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்பட்ட 11 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதற்கு மறுதினம், குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட ஆறு பேரைக் தீவிரவாதிகள் கடத்திச் செல்ல மாநிலத்தில் மீண்டும் பதட்டமான சூழல் உருவானது.
இந்த நிலையில்தான் தீவிரவாதிகள் கடத்திச் செல்லப்பட்ட 6 பேர் கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு ஆற்றில் வீசப்பட்ட நிலையில் மீட்கப்பட்டனர்.
இந்தத் தகவல் அறிந்ததும், மணிப்பூர் மீண்டும் போராட்டக் களமாக மாறத் தொடங்கியுள்ளது. இறந்தவர்களுக்கு ஆதரவாக பாஜக எம்எல்ஏ வீட்டை முற்றுகையிடத் தொடங்கினர்.
இதற்கிடையே, மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட பாதுகாப்புப் படைகளுக்கு உத்தரவு என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும், வதந்திகளை நம்பாமல், பாதுகாப்புப் படைகளுக்கு ஒத்துழைப்பு தந்து அமைதி காக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.