’20’ வேண்டாம்! கத்தோலிக்க ஆயர்கள் பேரவையும் வலியுறுத்து.
’20’ வேண்டாம்!
கத்தோலிக்க ஆயர்கள் பேரவையும் வலியுறுத்து
அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட வரைவைக் கைவிடுமாறு கத்தோலிக்க ஆயர்கள் பேரவை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
புதிய அரசமைப்பை இயற்றும் பணிக்கு முன்னுரிமை வழங்கிச் செயற்படுமாறும் மேற்படி பேரவை இன்று வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
“மக்களின் இறைமை அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் பாதுகாக்கப்பட வேண்டும். 20 ஆவது திருத்தம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட முன்னர் அதனை விரிவாக ஆராய வேண்டும்.
அனைத்து அதிகாரங்களும் தனி ஒருவர் வசமாவது ஜனநாயக நாட்டுக்குப் பாதகமான விடயமாக அமையும்.
நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மக்களின் உண்மையான ஜனநாயக நிலைப்பாட்டைக் காண்பிப்பதில்லை.
நாடாளுமன்றத்தின் அரசமைப்புப் பேரவையூடாக புதிய அரசமைப்பொன்றை உருவாக்க வேண்டும். பொருட்கோடலை மேற்கொள்ள முடியாத வகையில் குறைபாடுகளின்றி அதனைத் தயாரிக்க வேண்டும்” – என்றுள்ளது.
அதேவேளை, அரசமைப்பின் 20 ஆவது திருத்தம் அவசியமற்றது என இரண்டு பௌத்த பீடங்கள் நேற்று விசேட கூட்டறிக்கையொன்றின் ஊடாக அறிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.