தலைமறைவான கஸ்தூரியை தெலுங்கானாவில் கைதுசெய்தது தமிழகக் காவல்துறை.
தலைமறைவாக தெலுங்கானா மாநிலத்தில் பதுங்கியிருந்த நடிகை கஸ்தூரியை தமிழ்நாட்டுத் தனிப்படை காவல்துறை அதிகாரிகள் அங்கு சென்று கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்துள்ளனர்.
அண்மையில் இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற நடிகை கஸ்தூரி, தெலுங்கு பேசும் மக்கள் குறித்து பேசிய கருத்து பெரிய சர்ச்சையாக வெடித்தது.
சமூக அமைப்புகளும் சமூக ஆர்வலர்களும் அரசியல் கட்சித் தலைவர்களும் அவரைக் கண்டித்திருந்தனர்.
அவர்மீது பல ஊர்களிலும் வழக்குத் தொடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தனது கருத்துக்கு வருத்தம் தெரிவிப்பதாகக் கஸ்தூரி தெரிவித்திருந்தார்.
இருப்பினும், கஸ்தூரிக்கு எதிராகச் சென்னை உள்ளிட்ட பல இடங்களிலும் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இதைத்தொடர்ந்து கஸ்தூரி முன்பிணை கேட்டு மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தள்ளுபடி செய்து கடந்த 14ஆம் தேதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து அவர் தமிழ் நாட்டில் இருந்து வெளியேறி தலைமறைவானார்.
அவரைத் தேடிப்பிடித்துக் கைது செய்ய காவல்துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டது. மேலும் அவரைக் கைது செய்வதற்காக இரண்டு தனிப்படைகளும் அமைக்கப்பட்டன.
தமிழ்நாடு மற்றும் ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலும் காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், கஸ்தூரி தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத் அருகே உள்ள பப்பலக்குடா பகுதியில் திரைப்படத் தயாரிப்பாளர் ஹரிகிருஷ்ணனின் மாளிகை வீட்டில் பதுங்கி இருப்பதாக சென்னை தனிப்படை காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படை காவல்துறை அங்கு சென்று நடிகை கஸ்தூரியைக் கைது செய்தது.
இந்த நிலையில், ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரியைத் தற்போது சென்னை அழைத்து வந்துள்ளனர். சிந்தாதிரிப்பேட்டை காவல் துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
யாருடைய தூண்டுதலின் பேரில் தெலுங்கு மக்கள் குறித்து அவர் இழிவாகப்பேசினார் என்பது குறித்தெல்லாம் விசாரித்து வருகின்றனர். மேலும் அவரிடம் வாக்குமூலம் பெற இருப்பதாகவும் சிந்தாதிரிப்பேட்டை காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
விசாரணை முடிந்ததும் எழும்பூர் நீதிமன்றத்தில் கஸ்தூரியை முன்னிலைப்படுத்த இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கஸ்தூரி மீது திருநகர், ஆண்டிப்பட்டி உட்பட தமிழகத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டன. அகில இந்திய தெலுங்கு சம்மேளன அமைப்பு சார்பில் நடிகை கஸ்தூரி மீது அளித்த புகாரின் அடிப்படையில், கலவரத்தைத் தூண்டுதல் உட்பட நான்கு பிரிவுகளின் கீழ், சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் கஸ்தூரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.