மருத்துவமனையில் தீ – தன்னுயிரைப் பாராமல் பிறர் குழந்தைகளைக் காப்பாற்றிய பெற்றோர்.
இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்து மருத்துவமனையில் மூண்ட தீயில் குழந்தைகளைப் பறிகொடுத்த பெற்றோர் மற்ற உயிர்களைக் காப்பாற்றியுள்ளனர்.
நேற்று முன்தினம் (15 நவம்பர்) ஹாராணி லட்சுமிபாய் மருத்துவக் கல்லூரியில் குழந்தைகளுக்கான தீவிரச் சிகிச்சைப் பிரிவில் தீ மூண்டது.
தீயில் 10 குழந்தைகள் மாண்டன. 44 குழந்தைகள் மீட்கப்பட்டன.
பெற்றோர் சிலர் குழந்தைகளைக் காப்பாற்றுவதற்குக் கண்ணாடியை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றதாக இந்திய ஊடகங்கள் கூறின.
தங்களுடைய குழந்தைகளைக் காணவில்லை என்றபோதிலும் கண் முன்னே இருந்த மற்ற குழந்தைகளைக் காப்பாற்றினர்.
குல்தீப் சிகாவார் (Kuldeep Sikarwar) என்ற ஆடவர் அவ்வாறு 5 குழந்தைகளைக் காப்பாற்றியதாக Hindustan Times ஊடகம் சொன்னது.
தீக்காயங்கள் நிறைந்த கைகளுடன் அவர் குழந்தைகளை அவசரச் சிகிச்சைப் பிரிவில் சேர்த்தார்.
ஆனால் அவருடைய குழந்தையின் நிலை என்னவென்று தெரியவில்லை.
மாண்ட 10 குழந்தைகளில் 7 குழந்தைகளை மட்டும் அடையாளம் காணமுடிந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
தீவிர சிகிச்சைப் பிரிவின் கண்ணாடியை உடைத்துக்கொண்டு உள்ளே சென்ற இன்னொருவர் யாக்குப் மன்சூரி (Yakub Mansuri).
தீயில் தம்முடைய 2 மகள்களைத் தேடிய அவர் மற்றவர்களின் குழந்தைகளைக் காப்பாற்றினார்.
ஆனால் சொந்த மகள்களை அவர் இழந்துவிட்டதாக Economic Times ஊடகம் சொன்னது.