2026 தேர்தலில் தவெக தலைவர் விஜய் போட்டியிடும் தொகுதி குறித்து வெளியான தகவல்!
தேர்தலில் தவெக தலைவர் விஜய் போட்டியிடும் தொகுதி குறித்து தருமபுரி மாவட்ட தலைவர் தா.ப.சிவா தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் நடிகர் விஜய், கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். தவெக தலைவர் விஜய், கட்சியின் முதல் அரசியல் மாநாட்டை விக்கிரவாண்டியில் நடத்தி கட்சி கொள்கைகளை அறிவித்ததோடு,
கொள்கை எதிரி, அரசியல் எதிரி குறித்தும் தெளிவுபடுத்தினார். இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை கிளப்பியது. தொடர்ந்து தன்னுடைய அரசியல் வருகையை பல வகையில் வெளிப்படுத்திய விஜயின் தவெக கட்சி,
10 மாதத்தில் 10 மில்லியன் உறுப்பினர்களை சேர்த்து வலுவான வேலையை செய்துவருகிறது. இந்த நிலையில், தவெக தலைவர் விஜய் தருமபுரி மாவட்டத்தில் போட்டியிடுவார் என அம்மாவட்டத்தின் தவெக கட்சி தலைவர் நா.ப.சிவா வெளிப்படுத்தியுள்ளார்.
தருமபுரியில் இன்று தமிழக வெற்றிக்கழகம் சார்பில், மாவட்ட தலைவர் நா.ப.சிவா தலைமையில் வழக்கறிஞர் பிரிவு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தமிழக வெற்றி கழகம் சார்பில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வழக்கறிஞர்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள்,
உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்தனர். பின்னர் நிர்வாகிகளிடையே தருமபுரி மாவட்ட தலைவர் தா.ப.சிவா பேசினார்.
அப்போது பேசிய அவர், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டமன்ற தொகுதிகளில் ஏதேனும் ஒரு தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் கட்சித் தலைவர் விஜய் போட்டியிடுவார் என தெரிவித்தார்.
இதை கேட்ட கட்சி தொண்டர்கள் கைத்தட்டி ஆராவாரம் செய்தனர். எனினும் உண்மையில் விஜய் தருமபுரியில் தான் போட்டியிடுவாரா என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.