தில்லியில் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களைத் தவிர அனைத்து மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் நிறுத்தப்பட்டுள்ளது

தில்லியில் காற்று மாசு காரணமாக 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களைத் தவிர அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் நிறுத்தப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும் என்று தில்லி முதல்வர் அதிஷி அறிவித்துள்ளார் .

குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில் தலைநகர் தில்லியில் காற்று மாசு தீவிரமடைந்துள்ளது. பனியைப் போல எங்கும் புகை மண்டலமாகக் காட்சியளிக்கிறது. தில்லியின் காற்று தரக் குறியீடு மிகவும் மோசமடைந்து நேற்று மாலை 441 அளவிலும், போகப்போக 457 அளவிலும் அதிகமாகியுள்ளது.

இந்த நிலையில், காற்று தர மேலாண்மை ஆணையம் வெளியிட்ட அறிவிப்பின்படி தீவிரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு ஏற்கனவே உள்ள 1,2,3 ஆம் நிலை கட்டுப்பாடுகளுடன் இன்று (நவ. 18) காலை 8 மணி முதல் 4 ஆம் நிலைக் கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அங்குள்ள பள்ளிக் கல்வித்துறைக் கொடுத்துள்ள சுற்றறிக்கையின்படி, ‘தில்லியில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளின் அனைத்து மாணவர்களுக்கும் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மற்றும் பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நவம்பர் 18 முதல் மறு உத்தரவு வரும் வரை நிறுத்தப்பட வேண்டும். 10, 12 வகுப்பு மாணவர்களுக்கு வழக்கம் போல நேரடி வகுப்புகள் செயல்படும் என உத்தரவிடப்படுகிறது’ என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும், நேரடி வகுப்புகளுக்குப் பதிலாக ஆன்லைன் வகுப்புகள் நடத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை, தில்லி முதல்வர் அதிஷி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

காற்று மாசு காரணமாக அத்தியாவசியப் பொருள்களை எடுத்துச் செல்லும் மற்றும் சுத்தமான எரிபொருளைப் பயன்படுத்தும் கனரக வாகனங்கள் மட்டுமே தில்லி நகருக்குள் அனுமதிக்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

மின்சாரம் மற்றும் பி.எஸ். 6 டீசல் வாகனங்கள் தவிர தில்லி பதிவெண் இல்லாத இலகுரக வாகனங்களுக்கும் நகருக்குள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.