அமெரிக்க ஆயுதங்களால் ர‌ஷ்யாவினுள் தாக்க உக்ரேனுக்கு அனுமதி.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அரசாங்கம், அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்பட்ட ஆயுதங்களைக் கொண்டு ர‌ஷ்யாவினுள் தாக்குதல் நடத்த உக்ரேனுக்கு அனுமதி அளித்துள்ளது.

அமெரிக்க அதிகாரிகள் இருவரும் இதுகுறித்த விவரம் தெரிந்த ஒருவரும் ஞாயிற்றுக்கிழமையன்று (நவம்பர் 18) இத்தகவலை வெளியிட்டனர். இது, உக்ரேன்-ர‌ஷ்யா போரில் வா‌ஷிங்டனின் போக்கில் ஏற்பட்டுள்ள பெரிய மாற்றமாகப் பார்க்கப்படுகிறது.

வரும் நாள்களில் உக்ரேன் முதன்முறையாக ர‌ஷ்யா மீது தொலைதூரத் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டிருப்பதாக விவரம் அறிந்த அந்நபர்கள் தெரிவித்தனர். பாதுகாப்புக் காரணங்களுக்காக அவர்கள் மேல்விவரம் ஏதும் வெளியிடவில்லை.

திரு டோனல்ட் டிரம்ப், அடுத்த அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்பதற்கு இரு மாதங்களுக்கு முன்னர் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எல்லைப் பகுதியிலிருந்து தொலைதூரத்தில் இருக்கும் ர‌ஷ்ய ராணுவப் பகுதிகளின் மீது தாக்குதுல் நடத்த வகைசெய்ய அமெரிக்க ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்குமாறு உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி பல மாதங்களாக வேண்டுகோள் விடுத்து வந்தார்.

ர‌ஷ்யா, இப்போரில் தனது ராணுவப் படைகளுடன் வடகொரியப் படைகளைச் சேர்த்துக்கொண்டததாகச் சொல்லப்படுவதற்குப் பதிலடியாக இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதெனத் தகவல் தெரிவித்த நபர்கள் குறிப்பிட்டனர். வடகொரியப் படைகள் ர‌ஷ்ய தரப்பில் களமிறக்கப்பட்டது வா‌ஷிங்டனையும் கியவ்வையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருப்பதாகவும் அவர்கள் கூறினர்.

இச்செய்தி குறித்து வெள்ளை மாளிகையும் அமெரிக்க வெளியுறவு அமைச்சும் கருத்து தெரிவிக்க மறுத்தன. உக்ரேனிய வெளியுறவு அமைச்சு, அந்நாட்டின் அதிபர் அலுவலகம் ஆகியவையும் தங்களிடம் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு உடனடியாகப் பதிலளிக்கவில்லை.

அமெரிக்க ஆயுதங்களைக் கொண்டு தங்களைத் தாக்க உக்ரேனுக்கு வா‌ஷிங்டன் ஒப்புதல் அளித்தால் அது போரை மோசமடையச் செய்யும் நடவடிக்கையாகும் என்று ர‌ஷ்யா எச்சரித்திருக்கிறது. ர‌ஷ்யாவினுள் தாக்குதல் நடத்த வா‌ஷிங்டன் கியவ்வுக்கு அனுமதி அளிக்க முடிவுசெய்வது மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கக்கூடும் என்று ர‌ஷ்ய மேலவையின் அனைத்துலக விவகாரப் பிரிவின் முதல் இணைத் தலைவரான விளாடிமிர் ட்‌ஷாபாரொவ் எடுத்துரைத்தார்.

உக்ரேன், 306 கிலோமீட்டர் தூரம் வரை பாய்ச்சப்படக்கூடிய ஏடிஏசிஎம்எஸ் (ATACMS) ஏவுகணைகளைக் கொண்டு ர‌ஷ்யாவினுள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று நம்பப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.