மோசடியில் ஈடுபட்ட சிங்கப்பூரரான செல்வந்தர் லிம்முக்கு 17 1/2 ஆண்டுகள் சிறை.
ஹின் லியோங் (Hin Leong) நிறுவனத்தின் நிறுவனர் லிம் ஊன் குய்ன் மோசடி, ஏமாற்று வேலை உள்ளிட்ட குற்றச்செயலில் ஈடுபட்டதற்காக 17 ஆண்டுகள் 6 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் வர்த்தகத் துறையில் நிதி சார்ந்த மிகப்பெரிய மோசடி இது என்று அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
எண்ணெய் வர்த்தகத்தில் கொடிகட்டி பறந்த லிம் ஊன் குய்ன் வங்கியை ஏமாற்றி 146.1 மில்லியன் வெள்ளி பெற்றது நிரூபணமானது.
82 வயது லிம் ஊன் குயின் எச்எஸ்பிசி (HSBC) வங்கியை ஏமாற்றினார். மோசடி ஆவணங்களைத் தயாரித்துள்ளார்.
சைனா ஏவியேஷன் ஆயில் (China Aviation Oil ), யுனிபெக் சிங்கப்பூர் (Unipec Singapore) ஆகிய இரண்டு நிறுவனங்களிடமிருந்து எண்ணெய் விற்பதற்கான ஒப்பந்தங்களைப்பெற்றுள்ளது போல் தோற்றத்தை ஏற்படுத்தி அவர் எச்எஸ்பிசி வங்கியை ஏமாற்றினார்.
பல நிதி சேவைகளை தடுத்தும் எண்ணெய் வர்த்தகத்தில் சிங்கப்பூர் ஈட்டிய நற்பெயரை கலங்கடித்து குற்றச்செயலில் ஈடுபட்ட லிம் ஊன் குயினுக்கு 20 ஆண்டுகள் தண்டனை விதிக்க வேண்டும் என்று அரசாங்க தரப்பு நீதிபதியிடம் கோரியது.
வழக்கை தீர விசாரித்த நீதிபதி இறுதியில் லிம்முக்கு திங்கட்கிழமை (நவம்பர் 18) 17.5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தார்.
இந்நிலையில் லிம்மின் பிணை நவம்பர் 18 வரை நீட்டிக்கப்பட்டது. பிணைக்காக லிம் 4 மில்லியன் வெள்ளி கட்டினார்.