பண்டாரவளையில் ஆடைத் தொழிற்சாலையொன்று விஷமி ஒருவரால் தீ வைப்பு.
பண்டாரவளைப் பகுதியின் ஆடைத் தொழிற்சாலையொன்று விஷமி ஒருவரினால் தீ மூட்டப்பட்டதால் தொழிற்சாலை முற்றுமுழுதுமாக தீக்கிரையாகியுள்ளது.
இச்சம்பவம் இன்று அதிகாலை மூன்றுமணியளவில் பண்டாரவளையைச் சேர்ந்தகெபில்லவெல என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளது.
ஆடைத் தொழிற்சாலையிலிருந்து தைத்து நிறைவுசெய்யப்பட்டு வெளிநாடொன்றிற்கு ஏற்றுமதி செய்யப்படவிருந்த இலட்சக்கணக்கான ரூபா பெறுமதிமிக்க உடைகள் மற்றும் ஆடைகள் உள்ளிட்ட உபகரணத் தொகுதிகள் அனைத்துமே தீக்கிரையாகியுள்ளன. பலகோடி ரூபா பெறுமதியான ஆடைகள் சேதமாகியிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளன.
கடந்த 2016ம் ஆண்டு ஆடைத் தொழிற்சாலை வர்த்தக அமைச்சினால் நிருமாணிக்கப்பட்டிருந்தது. நூற்றுக் கணக்கான தமிழ்,சிங்கள இளைஞர்,யுவதிகள் ஆடைத் தொழிற்சாலையில் கடமையாற்றி வந்திருந்தனர்.
ஆடைத் தொழிற்சாலை சுவாலைவிட்டு எரிந்துகொண்டிருந்ததை அப்பகுதியின் ஒருவர் கண்டு, மக்களிடம் தெரியப்படுத்தியதையடுத்து அயலவர்கள் அங்கு கூடினர். அவ்வேளையில் தீப்பந்தத்துடன் தப்பியோடிய நபரொருவரை மக்கள் வலைத்துப் பிடித்து பண்டாரவளைப் பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.