சித்த மருத்துவ பீடாதிபதியாக திருமதி சத்தியசீலன் தெரிவு.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சித்த மருத்துவ பீடத்தின் பீடாதிபதியாக சித்த வைத்திய கலாநிதி திருமதி விவியன் சத்தியசீலன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற சித்த மருத்துவ பீடச் சபைக் கூட்டத்தில் நடத்தப்பட்ட பீடாதிபதி தெரிவின்போது 6 மேலதிக வாக்குகளைப் பெற்று கலாநிதி திருமதி விவியன் சத்தியசீலன் பீடாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
யாழ். பல்கலைக்கழகத்தில் இதுவரை காலமும் சித்த மருத்துவ அலகாகச் செயற்பட்டு வந்த சித்த மருத்துவ கற்கை அலகு கடந்த ஜூலை 26 ஆம் திகதி பீடமாகத் தரமுயர்த்தப்பட்டது.
சித்த மருத்துவ பீடத்தில் நஞ்சியல் மற்றும் பரம்பரை மருத்துவம், மனித உயிரியல், சமூகநல மருத்துவம், சிரோரோகமும் அறுவை மருத்துவமும், நோய் நாடல் சிகிச்சை, குணபாடம், மூலதத்துவம் ஆகிய கற்றல் துறைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
சித்த மருத்துவ அலகு பீடமாகத் தரமுயர்த்தப்பட்ட நாளில் இருந்து முன்னாள் துறைத் தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி திருமதி விவியன் சத்தியசீலன் பதில் பீடாதிபதியாகச் செயற்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.