எல்ஐசி இணையதளம் ஹிந்தியில் மாற்றப்பட்டதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
எல்ஐசி இணையதளம் ஹிந்தியில் மாற்றப்பட்டதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
எல்ஐசி இந்திய அரசுக்கு சொந்தமான மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் ஆகும். 2019 ஆம் ஆண்டு நிலவரப்படி எல்ஐசி 290 மில்லியன் பாலிசிதாரர்களை கொண்டு உள்ளது.
இதன் காரணமாக 2024 ஆம் ஆண்டு நிலவரப்படி எல்ஐசி, ₹52.52 டிரில்லியன் (US$630 பில்லியன்) மதிப்பிலான சொத்துக்களை கொண்டுள்ளது.
ஆங்கிலத்தில் செயல்பட்டு வந்த எல்ஐசி இணையதளமானது, இன்று காலை முதல் முழுக்க இந்தி மொழியில் மட்டுமே இயங்கியது. மொழியை தேர்வு செய்யும் ஆப்சனும் இந்தி மொழியில் மட்டுமே இருந்ததால், இந்தி தெரியாத மற்ற மொழி பேசும் மக்களுக்கு சவாலானதாக இருந்தது.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது மீண்டும் ஆங்கிலத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தொழில்நுட்ப சிக்கல் காரணமாக ஹிந்தியில் மாறியதாக விளக்கமளிக்கப்பட்டது.
இந்த சம்பவத்திற்கு தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், தற்போது முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எல்ஐசி இணையதளம் இந்தி திணிப்புக்கான பிரச்சார கருவியாக குறைக்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தைத் தேர்ந்தெடுக்கும் விருப்பம் கூட இந்தியில் காட்டப்படுகிறது. இது இந்தியாவின் பன்முகத்தன்மையை மிதித்து, பலவந்தமாக கலாச்சார மற்றும் மொழி திணிப்பு தவிர வேறில்லை.
எல்ஐசி அனைத்து இந்தியர்களின் பங்களிப்புடன் ஆதரவுடன் வளர்ந்தது. பெரும்பான்மையான பங்களிப்பாளர்களுக்கு துரோகம் செய்ய எவ்வளவு தைரியம்? இந்த மொழி கொடுங்கோன்மையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என கோருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.