மகாராஷ்டிர பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது
மகாராஷ்டிர பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று(நவ.20) காலை 7 மணிக்கு தொடங்கியது.
மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு இன்று(நவ. 20) ஒரே கட்டமாக தோ்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, இங்குள்ள 288 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இவா்கள் வாக்களிக்க வசதியாக 1,00,186 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சுமாா் 6 லட்சம் ஊழியா்கள் தோ்தல் பணியில் ஈடுபடவுள்ளனா். மொத்தம் 4,135 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.
ஆளும் பாஜக தலைமையிலான மஹாயுதி கூட்டணி ஆட்சியைத் தக்கவைக்க போட்டியிடுகிறது. மகாயுதி கூட்டணியில் பாஜக 149 இடங்களிலும், சிவசேனை 81 இடங்களிலும், அஜீத் பவார் தலைமையிலான என்சிபி 59 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.
எதிர்க்கட்சிகளின் மஹாவிகாஸ் அகாடி கூட்டணியில், காங்கிரஸ் 101 வேட்பாளர்களையும், சிவசேனை (உத்தவ்) 95 வேட்பாளர்களையும், தேசியவாத காங்கிரஸ்(சரத் பவார்) 86 வேட்பாளர்களையும் நிறுத்தியுள்ளன.
2019 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலைவிட இந்த முறை வேட்பாளர்களின் எண்ணிக்கை 28 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு, 4,136 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் 2,086 பேர் சுயேச்சை வேட்பாளர்கள்.
அக்டோபர் 30 ஆம் தேதி நிலவரப்படி, மொத்தமாக 9,70,25,119 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 5,00,22,739 ஆண் வாக்காளர்களும், 4,69,96,279 பெண் வாக்காளர்களும், 6,101 மூன்றாம் பாலித்தனவர்களும் உள்ளனர்.
இந்தத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வருகிற நவம்பர் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது.