மன்னார் வைத்தியசாலையில் உயிரிழந்த தாய், சேய் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனாவுக்கு அனுப்பிவைப்பு – மத்திய சுகாதார அமைச்சின் விசேட குழு நேரில் வந்து விசாரணைகளை ஆரம்பித்தது.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்த இளம் தாய் மற்றும் சேயின் சடலங்கள் மேலதிக பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு நேற்று இரவு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மன்னார், பட்டித்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 28 வயதான இளம் தாய் வேணுஜா என அழைக்கப்படும் ஜெகன் ராஜ சிறி திருமணமாகி 10 வருடங்கள் பிள்ளை இல்லாத நிலையில் நேற்று பிரசவத்திற்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் மகப்பேற்று விடுதியில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சையின்போது தாயும் சேயும் மரணமடைந்துள்ளனர்.

இந்தநிலையில் உறவினர்கள், பெற்றோர்கள் உட்பட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஒன்றினைந்து மகப்பேற்று விடுதியில் போராட்டம் நடத்திய நிலையில் வைத்தியசாலையில் பதற்றமான நிலை ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வருகை தந்த பொலிஸார் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

சம்பவ இடத்துக்கு வருகை தந்த மன்னார் நீதிவான் இறந்த தாய் மற்றும் சேயின் சடலங்களைப் பிரதே பரிசோதனைக்காகவும், மேலதிக விசாரணைகளுக்காகவும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டார்.

நீதிவானின் உத்தரவுக்கு அமைய சடலங்கள் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, மேற்படி மரணம் தொடர்பில் மத்திய சுகாதார அமைச்சின் செயலாளரினால் அமைக்கப்பட்ட விசேட குழு இன்று புதன்கிழமை காலை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வருகை தந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது என்று மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஆசாத் எம்.ஹனிபா தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.