மகாராஷ்டிரா தேர்தல்: வாக்களித்த கிரிக்கெட், திரைப் பிரபலங்கள்.
மகாராஷ்டிரா மாநிலச் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரேகட்டமாக புதன்கிழமையன்று (நவம்பர் 20) நடைபெற்றது. இதேபோன்று, ஜார்க்கண்ட் சட்டசபைக்கான 2ஆம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று அதிகாலை காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடந்தது.
மகாராஷ்டிராவில் 288 தொகுதிகளிலும் ஜார்க்கண்ட்டில் 38 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு பலத்த காவல்துறை பாதுகாப்புடன் நடந்தது. பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் மத்திய ரிசர்வ் படை காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மகராஷ்டிராவில் பாஜக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அடங்கிய ஆளும் ‘மகாயுதி’ கூட்டணியும் காங்கிரஸ், உத்தவ் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் ஆகிய எதிர்க்கட்சிகள் அடங்கிய ‘மகாவிகாஸ் அகாடி’ கூட்டணியும் நேருக்கு நேர் போட்டியிட்டனர். அம்மாநிலத்தில், 9 கோடியே 70 லட்சத்து 25 ஆயிரத்து 119 வாக்காளர்கள் ஓட்டுப்போட தகுதியானவர்கள் என்றும் வாக்காளர்கள் ஓட்டுப்போட வசதியாக 1 லட்சத்து 186 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன என்றும் கூறப்பட்டது.
அரசியல் பிரபலங்களும் இந்தித் திரையுலகைச் சேந்தவர்களும் மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிகம் வசிக்கின்றனர்.
கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் மும்பை பாந்த்ராவில் உள்ள மாநகராட்சி பள்ளியில் தனது குடும்பத்தோடு சென்று வாக்களித்தார்.
நடிகர் சோனுசூட் மும்பையில் வாக்களித்த பிறகு அளித்த நேர்காணலில், “வாக்களிப்பது ஒவ்வொருவரது கடமை” என்று தெரிவித்தார்.
இந்திய நேரம் மாலை 5 மணி நிலவரப்படி மகாராஷ்டிராவில் 58.22 விழுக்காடு வாக்குகள் பதிவாகின. மகாராஷ்டிரா சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நவம்பர் 23ஆம் தேதி (சனிக்கிழமை) வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இதேபோல் 81 தொகுதிகளைக் கொண்ட ஜார்க்கண்ட் மாநில சட்டசபைத்தேர்தல் 2 கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில், 43 தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடந்தது. இந்த தொகுதிகளில் மொத்தம் 1.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். 528 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) தலைமையிலான இண்டியா கூட்டணிக்கும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
இந்திய நேரம் மாலை 5 மணி நிலவரப்படி ஜார்க்கண்ட்டில் 67.59 விழுக்காடு வாக்குகள் பதிவாகின. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் நவம்பர் 23ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர உத்தரப்பிரதேசம், பஞ்சாப், கேரளா, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள 15 சட்டமன்ற தொகுதிகளுக்கும் நேற்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற தேவையான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது.