ரவியின் பெயரை தேர்தல் ஆணைக்குழுவிற்கு அனுப்பியது ரணிலுக்கு தெரியாமல் அல்ல : செயலாளர் ஷியாமலா பெரேரா

ரவி கருணாநாயக்கவின் பெயரை தேசியப்பட்டியல் எம்.பி பெயர் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அனுப்பப்பட்டது இரகசியமாக அல்ல… ரணிலுக்கும் தெரிவித்த பின்னரே… என மௌனம் கலைத்த காஸ் சிலிண்டர் செயலாளர்

புதிய ஜனநாயக முன்னணியின் செயற்குழுவின் ஏகமனதாக எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் ரவி கருணாநாயக்க தேசியப்பட்டியலுக்கு பரிந்துரைக்கப்பட்டதோடு, கட்சியினால் அங்கீகரிக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் ரவி கருணாநாயக்க தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு பரிந்துரைக்கப்படுவதற்கு முன்னர் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அறிவித்தேன் என புதிய ஜனநாயக முன்னணியின் செயலாளர் ஷியாமலா பெரேரா தெரிவித்துள்ளார்.

நவம்பர் 17 அன்று கூடிய கட்சியின் செயற்குழு ஒருமனதாக இந்த நியமனத்தை அங்கீகரித்ததாக அவர் வலியுறுத்துகிறார்.

கட்சிகளுடன் இணக்கம் காணப்பட்ட உடன்படிக்கையின் 5ஆவது சரத்தின் பிரகாரம், புதிய ஜனநாயக முன்னணியால் முன்னிறுத்தப்படும் வேட்பாளர்களுக்கு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளில் ஒன்றையாவது வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக செயலாளர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, புதிய ஜனநாயக முன்னணிக்கான தேசியப் பட்டியலில் 2 ஆசனங்களை அக்கட்சி ஒப்புக்கொண்டதால், கட்சியால் பரிந்துரைக்கப்பட்ட ஒரு வேட்பாளருக்கு ஒரு ஆசனம் வழங்கும் வாய்ப்பு அக்கட்சிக்குக் கிடைத்துள்ளது.

இதன்படி, 2024 நவம்பர் 17ஆம் திகதி கூடிய கட்சியின் செயற்குழுவில் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ரவி கருநாயக்கவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டதாகவும், அந்த பதவிக்கு ரவி கருணாநாயக்கவை நியமிக்க ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டதாகவும் செயலாளர் வலியுறுத்துகிறார்.

கட்சியின் செயலாளர் என்ற ரீதியில் கட்சி எடுத்த தீர்மானத்தின் பிரகாரம், ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக ஏனைய கட்சிகளின் பிரதிநிதிகள் தமது நிலைப்பாட்டை தெரிவிக்காத காரணத்தினால் அவரது பெயர் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டது.

புதிய ஜனநாயக முன்னணியின் செயலாளர் என்ற வகையில் சட்ட விரோதமான செயற்பாடுகள் எதனையும் செய்யவில்லை எனவும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மீறவில்லை எனவும் செயலாளர் என்ற ரீதியில் உரிமையை மாத்திரம் பிரயோகித்ததாகவும் புதிய ஜனநாயக முன்னணியின் செயலாளர் ஷியாமலா பெரேரா வலியுறுத்தியுள்ளார்.

தன் கட்சியின் பங்காளிக் கட்சியல்லாத, வாக்காளர் தளம் இல்லாத, தொடர்ந்து கட்சி மாறுகிற, தாழ்வு மனப்பான்மை கொண்டோர் கண்ணாடிக்கு முன் சென்று தம் முகங்களை பார்க்கச் சொல்ல வேண்டும். இவர்களின் பேச்சுக்கு பதில் சொல்லி காலத்தை கடத்துவது விரயம்.

பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, பொதுஜன ஐக்கிய முன்னணி, புதிய கூட்டணி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பன புதிய ஜனநாயக முன்னணியின் கூட்டணிக் கட்சிகளாகும்.

இந்த நியமனம் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதுவும் தெரியாது எனவும், ஐக்கிய தேசியக் கட்சியினால் இந்த பதவிக்கு தலதா அத்துகோரல முன்மொழியப்பட்டதாகவும், ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன ஊடகங்களுக்கு விளக்கமளித்துள்ளார். .

பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு காஞ்சன விஜேசேகர மற்றும் நிமல் லான்சா ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ள நிலையில், அந்த முன்மொழிவுகளில் இல்லாத ரவி கருணாநாயக்க கூட்டணி தேசியப்பட்டியல் வழி பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு பரிந்துரைப்பது சிக்கலாக உள்ளதாக பொதுஜன ஐக்கிய பெரமுன தெரிவித்துள்ளது.

இதேவேளை, தேசியப்பட்டியல் எம்.பி.க்களின் பதவிகள் தொடர்பான விடயம் தொடர்பில் காஸ் சிலிண்டர் தலைவர்கள் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் காரியாலயத்தில் கலந்துரையாடியுள்ளனர்.

என்ன நடந்தது என்பதை அறிய சட்டத்தரணி யசஸ் டி சில்வா, சட்டத்தரணி குமார் துனுசிங்க, சட்டத்தரணி இந்திக்க வேரகொட, கலாநிதி விதானகே உள்ளிட்ட குழுவொன்றை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த அறிக்கை மூன்று வாரங்களுக்குள் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரிடம் கையளிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.