தீர்வு விடயத்தில் டில்லியின் கடும் அழுத்தம் மிக அவசியம் – தூதுவரை நேரில் சந்தித்து தமிழரசின் எம்.பிக்கள் வலியுறுத்து.

“இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு வேண்டும். இது தொடர்பில் அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான இலங்கையின் புதிய அரசுக்கு இந்திய மத்திய அரசு கடும் அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும்.”

இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழு வலியுறுத்தியுள்ளது.

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவுக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுவினருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று வியாழக்கிழமை கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் நடைபெற்றது. இதன்போதே மேற்கண்டவாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பில் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுவில் அதன் தலைவரும் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான இராசமாணிக்கம் சாணக்கியன், ஞானமுத்து ஸ்ரீநேசன், இளையதம்பி சிறிநாத், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது, நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பிலும், தமிழரசுக் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் அத்தகைய அரசியல் நகர்வுகளில் இந்தியாவின் வகிபங்கு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டன.

Leave A Reply

Your email address will not be published.