யாழ். பல்கலைக்கழகத்தில் பகிடிவதையில் ஈடுபட்ட மாணவர்களுக்குக் கடும் தண்டனை.
யாழ். பல்கலைக்கழகத்தில் பகிடிவதையில்
ஈடுபட்ட மாணவர்களுக்குக் கடும் தண்டனை
துணைவேந்தருக்கு மாணவர் ஒழுக்காற்றுச் சபை பரிந்துரை
யாழ். பல்கலைக்கழக புதுமுக மாணவர்கள் மீது பகிடிவதை புரிந்த சிரேஷ்ட மாணவர்களின் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்குக் கடுமையான தண்டனைகளை வழங்குமாறு பல்கலைக்கழக மாணவர் ஒழுக்காற்றுச் சபை பரிந்துரைத்துள்ளது.
புதிய துணைவேந்தராகப் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா பதவியேற்ற பின்னர், பல்கலைக்கழகத்தில் பகிடிவதையில் ஈடுபடுபவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதற்காக விரைவு பொறிமுறை அறிமுகப்படுத்தப்பட்டிருந்த நிலையில், குற்றம் இடம்பெற்று ஒரு மாத காலத்தினுள் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மாணவர் ஒழுக்காற்றுச் சபையின் பரிந்துரைப் பிரகாரம், யாழ். பல்கலைக்கழக சித்தமருத்துவத்துறையைச் சேர்ந்த மூன்றாம் வருட மாணவர்கள் 4 பேருக்குக்கு ஒரு கல்வி ஆண்டு காலம் கல்வி கற்பதற்குத் தடை விதிக்கப்பட்டிருப்பதுடன், பல்கலைக்கழக அல்லது துறைசார் மாணவர் ஒன்றியப் பதவி நிலைகளை வகிக்க முடியாத வகையிலான தடையுத்தரவு மற்றும் கல்வி கற்கும் காலத்தில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் விடுதிகளில் தங்கியிருந்து கற்பதற்கான வசதிகளும் மறுக்கப்படல் வேண்டும் என்று பல்கலைக்கழக மாணவர் ஒழுக்காற்றுச் சபை துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவுக்குப் பரிந்துரை செய்துள்ளது.
அத்துடன் குற்றத்தின் பாரதூரத் தன்மை கருதி மாணவி ஒருவருக்குக் கடும் எச்சரிக்கையுடனான விலக்களிப்புக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒழுக்காற்றுச் சபையின் இரண்டாவது கூட்டம் இன்று இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தின்போது, கடந்த மாதம் 03 ஆம் திகதி சித்த மருத்துவத்துறையில் இடம்பெற்ற இம்சை வதை தொடர்பான இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
சித்த மருத்துவத் துறையில் இடம்பெற்ற இம்சை வதை தொடர்பில் ஆரம்பகட்ட பூர்வாங்க விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, அதனடிப்படையிலான குற்றப்பத்திரிகை மீதான முறைசார் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, விசாரணை அறிக்கை இன்று மாலை மாணவர் ஒழுக்காற்றுச் சபைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. பல்கலைக்கழக மாணவர் ஒழுக்காற்றுச் சபையின் பரிந்துரைக்கமைய தண்டனைக்குரியவர்களுக்கான அறிவித்தல்கள் நாளை துணைவேந்தரால் அனுப்பிவைக்கப்பட இருக்கின்றது.
பல்கலைக்கழக மாணவர் ஒழுக்காற்றுச் சபையில், பல்கலைக்கழகத்தின் சகல பீடாதிபதிகளான பத்துப் பேரும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் முன்மொழியப்பட்ட இரண்டு பேரவை உறுப்பினர்களும், மாணவ ஆலோசகர் ஒருவரும், பிரதிச் சட்ட நிறைவேற்று அதிகாரி (புறொக்டர்) ஒருவரும், போதனைசார் விடுதிக் காப்பாளர்கள் இருவருமாக இருபது பேர் அங்கம் வகிப்பதுடன், பதிவாளரின் நியமனப் பிரதிநிதியாக மாணவர் நலச் சேவைகளுக்கான உதவிப்பதிவாளர் செயலாளராகவும் செயற்படுகின்றனர்.
இன்றைய கூட்டத்தில், சித்த மருத்துவத் துறை மாணவர்களுக்கான தண்டனைகள் பரிந்துரைக்கப்பட்டதுடன், இனிவரும் காலத்தில் இதே பொறிமுறையில் பகிடிவதையில் ஈடுபட்டு, குற்றம் நிரூபிக்கப்படுமிடத்து கற்றல் நடவடிக்கைகளுக்கான தடை, சிறப்புத் துறைகளைகளுக்கான தடை, முதலாம், இரண்டாம் வகுப்புச் சித்திகளுக்கான தகைமையிழப்பு, மகாபொல மற்றும் நிதியுதவிகளைத் தடை செய்தல், பல்கலைக்கழக அல்லது துறைசார் மாணவர் ஒன்றியப் பதவி நிலைகளை வகிக்க முடியாத வகையிலான தடையுத்தரவு மற்றும் கல்வி கற்கும் காலத்தில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் விடுதிகளில் தங்கியிருந்து கற்பதற்கான வசதிகளும் மறுக்கப்படல் உட்பட கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்பதுடன், குற்றத்தின் தன்மையைப் பொறுத்து பல்கலைக்கழக மாணவர் பதிவு இரத்துச் செய்யப்பட வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது