உயிர்க்கொல்லி நோய் நிமோனியாவுக்கு எதிரான ‘போர்’: தீவிரம் காட்டும் மலேசியா.

மலேசியாவில் உயிர்க்கொல்லி நோய்கள் பட்டியலில் நிமோனியா எனப்படும் நுரையீரல் அழற்சி முதலிடம் வகிக்கிறது.

இதற்கு முன்பு இதய நோய் முதலிடம் வகித்தது.

நிமோனியாவால் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்துள்ளது என மலேசியாவின் புள்ளிவிவரத்துறை கூறியது.

அந்நோயின் காரணமாக 2014ஆம் ஆண்டில் 9,250 பேர் மாண்டனர்.

2023ஆம் ஆண்டில் நிமோனியா பாதிப்பு ஏற்பட்டு மலேசியாவில் 18,181 பேர் மாண்டனர்.

இதையடுத்து, அந்நோயை எதிர்கொள்ள தடுப்பூசி போடும் முயற்சிகளுக்கும் மேம்படுத்தப்பட்ட சுகாதாரப் பராமரிப்புக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

பெக்டீரியா, கிருமி, பூஞ்சை தொற்று மூலம் நிமோனியா பாதிப்பு ஏற்படுகிறது.

தகுந்த சிகிச்சை அளிக்கப்படாவிடில் மிகக் கடுமையான நுரையீரல் தொற்று ஏற்பட்டு உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெக்டீரியா, கிருமியால் ஏற்படும் நிமோனியா எளிதில் பரவக்கூடியது.

பொதுவாக இருமல், தும்மல், சுவாசம் ஆகியவை மூலம் அது பிறருக்குப் பரவும்.

இந்நோய் அனைத்து வயதினரையும் பாதிக்கக்கூடியது.

65 வயதுக்கும் மேற்பட்டோரும் சிறாரும் இந்நோயால் எளிதில் பாதிப்படையலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

நெஞ்சு சளியுடனான இருமல், காய்ச்சல், சாப்பிட விருப்பமின்மை, குழப்பநிலை, கடும் சோர்வு, மூச்சுப் பிரச்சினை ஆகியவை நிமோனியா பாதிப்பின் அறிகுறிகள்.

பெக்டீரியாவால் ஏற்படும் நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டோருக்கு நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்து (Antibiotics) தரப்படுகிறது.

ஆனால் கிருமிகளால் ஏற்படும் நிமோனியாவுக்கு மருந்து இல்லை.

பாதிப்பு கடுமையானதாக இருந்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவேண்டிய நிலை ஏற்படும்.

இதற்கிடையே, நிமோனியா பாதிப்பைத் தடுக்கும் நடவடிக்கைகளை மலேசியா முடுக்கிவிட்டுள்ளது.

நிமோனியா ஏற்படாமல் இருக்கவும் அந்நோயிடமிருந்து பாதுகாத்துக்கொள்ளவும் பல நியூமகோக்கல் (pneumococcal) தடுப்பூசிகள் உள்ளன.

குழந்தைகளும் 65 வயதுக்கும் மேற்பட்ட மூத்தோரும் அந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும் என்று ஊக்குவிக்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.