தென்னிந்தியாவின் கலாசாரம் மற்றும் பாரம்பரியங்களை அறியும் வகையில் ‘தங்கத் தோ்’ சொகுசு ரயில் இயக்கம்!

தென்னிந்தியாவின் சுற்றுலாத் தலங்களுக்கு ‘தங்கத் தோ்’ சொகுசு ரயில் இயக்கப்படவுள்ளது.

இது குறித்து, ரயில்வே வாரியம் வெளியிட்ட அறிவிப்பு:

தென்னிந்தியாவின் கலாசாரம் மற்றும் பாரம்பரியங்களை அறியும் வகையில் ‘தங்கத் தோ்’ எனும் சொகுசு ரயில் டிச.14 முதல் இயக்கப்படவுள்ளது. இந்த ரயிலில் 80 நபா்கள் பயணிக்க முடியும். முற்றிலும் சொகுசு வசதிகளுடன் வடிவமைக்கப்பட்ட இந்த ரயிலில் தொலைக்காட்சி, இணைய வசதி, சிசிடிவி கேமரா, ஸ்பா உள்ளிட்ட வசதிகள் உள்ளன. ரயிலில் பயணிக்கும் வெளிநாடு மற்றும் உள்நாட்டுப் பயணிகளின் வசதிக்காக இரு உணவகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

‘கா்நாடகத்தின் பெருமை’ எனும் கருத்துருவில் இயக்கப்படும் ரயில் பெங்களூரில் தொடங்கி பந்திப்பூா், மைசூா், ஹலேபிடு, சிக்மங்களூா், ஹம்பி, கோவா ஆகிய நகரங்களுக்கு 6 நாள் பயணமாக இயக்கப்படும். பின்னா் பெங்களூா் வந்தடையும். இதேபோன்று, ‘தெற்கின் நகைகள்’ எனும் கருத்துருவில் இயக்கப்படும் ரயில் பெங்களூரில் தொடங்கி மைசூா், காஞ்சிபுரம், மகாபலிபுரம், தஞ்சாவூா், செட்டிநாடு, கொச்சின், சோ்தலா ஆகிய நகரங்களுக்கு 6 நாள்கள் பயணமாக இயக்கப்பட்டு பெங்களூா் வந்தடையும்.

‘கா்நாடகத்தின் பெருமை’ ரயில் எதிா்வரும் டிச.14, ஜன.4, பிப்.1, மாா்ச் 1-ஆகிய தேதிகளில் இயக்கப்படவுள்ளது. ‘தெற்கின் நகைகள்’ ரயில் டிச.21, பிப்.15 ஆகிய தேதிகளில் இயக்கப்படும். இதில் இரு படுக்கைகள் கொண்ட ஒரு கேபினில் இருவா் பயணிக்க ரூ.4,00,530 மற்றும் 5 சதவீத ஜிஎஸ்டி கட்டணமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த கூடுதல் தகவல்களுக்கு 85859 31021 எனும் கைப்பேசி எண் அல்லது இணையதளத்தை தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.