ஈ.பி.டி.பியில் இருந்து வெளியேறிய திலீபன்.
முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வவுனியா மாவட்ட நிர்வாகச் செயலாளருமான குலசிங்கம் திலீபன் கட்சியில் இருந்தும் அதன் அனைத்துப் பொறுப்புக்களில் இருந்தும் வெளியேறுவதாக இன்று அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தி அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
“ஆரம்பத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தமிழரசுக் கட்சியில் ஆரம்பித்த எனது அரசியல் பயணம், பின்பு 2013 ஆம் ஆண்டிலிருந்து ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி.) உடன் இணைந்து கட்சியின் வவுனியா மாவட்ட நிர்வாகச் செயலாளராகப் பொறுப்பேற்று மக்கள் பணியாற்றினேன். மேலும், 2020 இல் நடைபெற்ற தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினராகவும் தெரிவாகினேன்.
தற்போது நடைபெற்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட எனக்குக் கணிசமான வாக்குகளே கிடைக்கப் பெற்றன. இதுவரை, காலமும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியில் பயணித்து மக்கள் சேவையாற்றினேன்.
சில விடயங்கள் காரணமாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியில் இருந்து விலகுகின்றேன். இது தொடர்பான கடிதத்தை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுக்குப் பதிவுத் தபாலில் அனுப்பியுள்ளேன்.
இந்தக் கட்சியில் இருந்து நான் வெளியேறுவதற்குக் கட்சியோ அல்லது கட்சியின் தலைமையோ காரணம் இல்லை. இது எனது தனிப்பட்ட முடிவு என்பதைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.” – என்றுள்ளது.