எம்.பி அர்ச்சுனா பகிரங்கமாக மன்னிப்பு கோரினார்.. (Video)
10வது பாராளுமன்றம் ஆரம்பமான நாள் எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்தில் அமர்ந்திருந்த யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் அதற்காக மன்னிப்புக் கோரினார்.
புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக பாராளுமன்றத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு செயலமர்வில் இது இடம்பெற்றுள்ளது.
“நான் எங்கே உட்கார வேண்டும் எனக் கேட்டேன். அந்த பக்கம் போய் உட்காருங்க , எங்கயும் உட்காரலாம் ஒன்னும் தப்பு இல்லை டாக்டர் என்றார்கள். பிறகு முன்னே சென்று அமர்ந்தேன். பல்கலைக் கழகம் போய் பழக்கம்.. இங்கு கையை உயர்த்தி நாடாளுமன்றத்துக்கு வரவில்லை. எங்கு வேண்டுமானாலும் போய் உட்காரலாம் என்று நினைத்தேன்.
அப்போது நாலு பேர் வந்து என்னுடன் பேசினார்கள். எதிர்க்கட்சித் தலைவர் தினமும் உட்காரும் நாற்காலி இது என்று என்னிடம் வந்து சொன்னார்கள். பிறகு வேறு நாற்காலியில் உட்காரலாம் என்று நினைத்தேன். நான் 8வது நாற்காலியில் போய் உட்கார எந்த காரணமும் இல்லை.
எதிர்க்கட்சித் தலைவர் நாற்காலியில் புலி வந்து அமர்ந்திருக்கிறது என எல்லா ஊடகங்களிலும் புலியின் பெயரைப் போட்டது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. நான் வேண்டுமென்றே போய் உட்காரவில்லை… எனக்கு குரூப் இல்லை, சுயேற்சையாக வந்தேன், அதனால் எங்கு உட்காருவது, எங்கே செல்வது என்று தெரியவில்லை…
அந்த வகையில் நான் தவறு செய்துவிட்டேன் என பகிரங்கமாக மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். மன்னிக்கவும் நான் அந்த நாற்காலியில் திட்டம் போட்டு உட்காருவேன் என எதிர்பார்க்கவில்லை என்றார் அர்ச்சுனா.