சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் உள்ளிட்ட குழு ஜனாதிபதியை சந்தித்தது!
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் சர்வதேச திணைக்களத்தின் பிரதி அமைச்சர் சன் ஹையன் தலைமையிலான சீன பிரதிநிதிகள் நேற்று (25) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவை சந்தித்தனர்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி பெற்ற வெற்றிக்கும், பொதுத் தேர்தலில் கட்சி அமோக வெற்றி பெற்றதற்கும் வாழ்த்துத் தெரிவித்த சீன பிரதி அமைச்சர், இந்த வெற்றிகளின் பின்னர் இலங்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை பாராட்டினார்.
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் தலைமையில் இலங்கையுடன் நெருக்கமாகச் செயற்பட சீனா தயாராக இருப்பதாகவும் பிரதி அமைச்சர் தலைமையிலான குழுவினர் ஜனாதிபதியிடம் தெரிவித்தனர்.
சீனா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளின் அபிவிருத்தி வாய்ப்புகள் குறித்து இங்கு கவனம் செலுத்தப்பட்டதுடன் இரு நாடுகளுக்கும் இடையில் பரஸ்பர நன்மை பயக்கும் நீண்ட கால ஒத்துழைப்பு வேலைத்திட்டத்தை ஏற்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
முதலீட்டு ஊக்குவிப்பு, தொழில்நுட்ப பரிமாற்றம், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தி முயற்சிகளில் இலங்கைக்கு ஆதரவளிக்க சீனா தயாராக இருப்பதாக தூதுக்குழுவினர் தெரிவித்தனர்.
குறிப்பாக கல்வித்துறையில் அதிகாரிகளுக்கு பயிற்சியளித்து இலங்கையின் மனிதவள மேம்பாட்டிற்கு சீனா ஆதரவளிக்கும் என்றும் அவர்கள் ஜனாதிபதியிடம் உறுதியளித்தனர்.
சீன அரசாங்கம் இலங்கைக்கு வழங்கி வரும் தொடர்ச்சியான ஆதரவிற்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் வலியுறுத்தினார்.
சீனக் குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்தி, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் (IDCPC ) மத்தியக் குழுவின் சர்வதேசத் துறையின் துணை இயக்குநர் ஜெனரல் லின் தாவோ, இயக்குநர் லீ ஜின்யான், துணை அமைச்சரின் செயலாளர் ஜின் யான், சீன மக்கள் குடியரசின் தூதர் குய் சென்ஹாங் ஆகியோர் கலந்து கொண்டனர்.