சட்டப்படி பணியாற்றும் எந்த அதிகாரிக்கும் துணை நிற்க ஜனாதிபதி உறுதி!

அனர்த்த முகாமைத்துவ சட்ட முறைமை சில ஆய்வுகளின் பின்னரே தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த சட்டங்களை உரிய முறையில் நடைமுறைப்படுத்துவதற்கு உழைக்கும் எந்தவொரு உத்தியோகத்தருக்கும் ஏற்படும் கடமைப் பிரச்சினைகளுக்கு தாம் துணை நிற்பதாகவும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தினார்.

பாதுகாப்பு பிரதியமைச்சர் அருண ஜயசேகர நேற்று (25) பதவியேற்கும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

அனர்த்த முகாமைத்துவத்தில் நிறுவன கட்டமைப்புகளை வலுப்படுத்துவது மட்டும் போதாது எனவும், தீர்வுகளை கீழ் மட்டத்திற்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

உள்ளுராட்சி நிறுவனங்களை பலப்படுத்துமாறும், அபாயகரமான பகுதிகளில் அனர்த்தங்கள் ஏற்படாமல் தடுப்பதற்கு புதிய தீர்வுகளை வழங்குமாறும் ஜனாதிபதி அரச ஊழியர்களிடம் கோரிக்கை விடுத்தார்.

அனர்த்த முகாமைத்துவத்திற்காக அரசாங்கம் மேற்கொள்ளும் செலவு மிகப் பெரியது எனவும் சட்டங்களை சரியாக நடைமுறைப்படுத்துவதன் மூலம் செலவை குறைக்க முடியும் எனவும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டினார்.

பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வைஸ் எயார் மார்ஷல் (ஓய்வு பெற்ற) சம்பத் துய்யகொண்த, பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன, முப்படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல். விக்கும் லியனகே, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா இந்த நிகழ்வில் இராணுவத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.