வல்வெட்டித்துறையில் தலைவர் பிரபாகரனின் வீட்டில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 70 ஆவது பிறந்த தினமான இன்று (நவம்பர் மாதம் 26 ஆம் திகதி) செவ்வாய்க்கிழமை யாழ். வல்வெட்டித்துறையில் கேக் வெட்டி வெகுவிமர்சையாகக் கொண்டாட்டப்பட்டது.

வல்வெட்டித்துறை, ஆலடி பகுதியில் அமைந்துள்ள தலைவர் பிரபாகரனின் பூர்வீக வீடு அமைந்திருந்த காணிக்குள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் கொண்டாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

கேக் வெட்டி, இனிப்புகள் வழங்கி பிறந்த தினம் கொண்டாடப்பட்டதுடன், இந்த நிகழ்வின் சிறப்பம்சமாகத் தலைவர் பிரபாகரனின் வீட்டு வளாகத்துக்குள் சிறுவர்கள் மற்றும் பொது மக்களால் 70 மரங்கள் நாட்டப்பட்டன.

அதேவேளை, அங்கு தலைவர் பிரபாகரனின் புகைப்படத்தைத் தாங்கிய பதாகை ஒன்றும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. அதன்போது அங்கு வந்த வல்வெட்டித்துறைப் பொலிஸார் பிரபாகரனின் புகைப்படத்தைக் காட்சிப்படுத்த முடியாது என்றும், அதற்குச் சட்டத்தில் இடமில்லை என்றும், புகைப்படத்தை நீக்கிவிட்டு பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வுகளை நடத்துங்கள் என்றும் அறிவுறுத்தினார்கள்.

அதன் பிரகாரம் பதாகையில் இருந்த தலைவர் பிரபாகரனின் புகைப்படத்தை மறைத்து விட்டு பிறந்தநாள் நிகழ்வை மக்கள் சிறப்பாகக் கொண்டாடினார்கள். 70 மாணவர்களுக்கான கல்வி உபகரணங்களும் இதன்போது வழங்கப்பட்டன.

Leave A Reply

Your email address will not be published.