செங்கடலில் விபத்துக்குள்ளான உல்லாச கப்பலில் இருந்து காணாமல் போன 16 பேரை தேடும் பணிகள் தீவிரம் .
செங்கடலில் விபத்துக்குள்ளான சுற்றுலாக் கப்பலில் இருந்து காணாமல் போனதாகக் கூறப்படும் 16 பேரைத் தேடும் நடவடிக்கைகள் இரண்டாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 44 சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற சுற்றுலாப் படகு செங்கடலில் நேற்று மூழ்கியதாகவும், எகிப்து அதிகாரிகள் 28 பேரை காப்பாற்றியதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
காணாமல் போனவர்களில் இரண்டு பிரித்தானிய பிரஜைகள், ஒரு பின்னிஷ் பிரஜை மற்றும் நான்கு எகிப்திய பிரஜைகள் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த கப்பல் பெரும் அலையில் சிக்கி மூழ்கியிருக்கலாம் என எகிப்து அதிகாரிகள் ஊகித்துள்ளதுடன், கப்பல் மூழ்குவதற்கு சுமார் 7 நிமிடங்கள் ஆனதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ‘சீ ஸ்டோரி’ உல்லாசப் பயணக் கப்பலின் பணியாளர்கள் அனைவரும் எகிப்தியர்கள் என்றும், ஐந்து ஸ்பெயின் நாட்டவர்களும் பல ஜேர்மன் மற்றும் அமெரிக்க பிரஜைகளும் கப்பலில் பயணம் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.