பாபநாசம் அருகே முன்விரோத தகராறில் இளைஞர் கொலை வழக்கில் சகோதரர்கள் உட்பட 10 பேருக்கு ஆயுள் சிறை!
பாபநாசம் அருகே முன்விரோத தகராறில் இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் சகோதரர்கள் 2 பேர் உட்பட 10 பேருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து கும்பகோணம் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. மேலும், 3 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம் மேல கபிஸ்தலம் காமராஜர் நகரை சேர்ந்தவர் அருண்ராஜ் (22). கூலித் தொழிலாளி. இவரது நண்பர் செல்வமணியின் இருசக்கர வாகனத்தை, மருத்துவக்குடி பாரதியார் நகரைச் சேர்ந்த சிலம்பரசன் (35) என்பவர் வாங்கிச் சென்றுள்ளார். அதை அவர் மீண்டும் திருப்பித் தராததால், இருசக்கர வாகனத்தை வாங்கித் தரும்படி, அருண்ராஜிடம் செல்வமணி கூறியுள்ளார். அதன்படி, செல்வமணியின் இருசக்கர வாகனத்தை திருப்பிக் கொடுத்துவிடும்படி சிலம்பரசனிடம் அருண்ராஜ் கண்டித்துள்ளார். இதனால், இருதரப்பினருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில், 2020 ஆக.12-ல் சிலம்பரசன் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து திருவலஞ்சுழி ஆர்ச் அருகில் நின்று கொண்டிருந்த அருண்ராஜை ஓட ஓட விரட்டி வெட்டிக் கொன்றனர். இதுகுறித்து விசாரித்த சுவாமி மலை போலீஸார் சிலம்பரசன், அவரது சகோதரர் கவியரசன்(32) மற்றும் நண்பர்களான மருத்துவக்குடி பாரதியார் நகரைச் சேர்ந்த நவாஸ் குமார் (26). பாதிரிமேடு கீழத் தெருவைச் சேர்ந்த ராம் கணேஷ் (27), திருவைக்காவூர் அண்ணா நகரைச் சேர்ந்த ஜீவா(44), மருத்துவக்குடியைச் சேர்ந்த யோகராஜ் (30), பொன்பேத்தியைச் சேர்ந்த ரஞ்சித் (27), கடிச்சம்பாடியைச் சேர்ந்த சிவா (22), நீடாமங்கலத்தைச் சேர்ந்த ரிச்சர்ட் சாமுவேல் (27), எருமைப்பட்டியைச் சேர்ந்த நெப்போலியன் (26), கொந்தகையைச் சேர்ந்த மணியரசன் (என்கிற) முகமது ஆசிக் (26), ஓலைப்பாடியைச் சேர்ந்த பாரதிராஜன் (27), பேராவூரணியைச் சேர்ந்த கஜேந்திரன் (34) ஆகிய 13 பேரை கைது செய்தனர்.
இந்த வழக்கு கும்பகோணம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம்சாட்டப்பட்ட 13 பேரில் சிலம்பரசன், கவியரசன், நவாஸ் குமார், ராம் கணேஷ், ஜீவா, யோகராஜ், ரஞ்சித், சிவா, ரிச்சர்ட் சாமுவேல், மணியரசன் ஆகிய 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தார். நெப்போலியன், கஜேந்திரன், பாரதிராஜன் ஆகிய 3 பேரை விடுதலை செய்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்கறிஞர் பா.விஜயகுமார் ஆஜரானார்.