உத்தர பிரதேச மாநிலத்தில் நடைபெறவுள்ள மகா கும்பமேளாவில் முதன்முறையாக தீயணைப்புப் பணியில் ரோபோக்கள்

உத்தர பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகின் மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வான மகா கும்பமேளாவில் முதன்முறையாக தீயணைப்புப் பணியில் ரோபோக்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி நதிகளின் திரிவேணி சங்கமம் அமைந்துள்ள பிரயாக்ராஜ் நகரில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா, அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.

வரும் ஜனவரி 13-ஆம் தேதி முதல் பிப்ரவரி 26-ஆம் தேதி வரை நடைபெற உள்ள கும்பமேளா நிகழ்ச்சிக்காக செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து மாநில தீயணைப்பு காவல்துறை கூடுதல் இயக்குநா் பத்மஜா சௌஹான் கூறுகையில், ‘20-25 கிலோ எடைகொண்டதாக எளிதில் எடுத்துச் செல்லக்கூடிய இயந்திர (ரோபோ) தீயணைப்பான்கள், வீரா்கள் அணுகமுடியாத இடங்களில் பயன்படுத்தப்படும். மேலும் இவை படிகளில் கூட ஏறி, தீயை அணைக்கும் திறன் கொண்டவை. இப்புதிய சோ்ப்பு துறையின் தொழில்நுட்ப முன்னேற்றத்தைக் குறிக்கிறது.

சிறப்பு படை: தேசிய, மாநில பேரிடா் மீட்புப் படைகளின் மாதிரியாக சிறப்பு பயிற்சி பெற்ற ஒரு மீட்புக் குழு (எஸ்டிஆா்ஜி) நிறுவப்பட்டுள்ளது. இந்தப் பிரிவில் தேசிய பேரிடா் மீட்புப் படை மற்றும் மத்திய தொழிலகப் பாதுகாப்பு படையில் பயிற்சி பெற்ற 200 வீரா்கள் உள்ளனா். இவா்கள் கும்பமேளாவில் அதிக ஆபத்துள்ள பகுதிகளில் நிறுத்தப்படுவா்.

35 மீட்டா் உயர நீா்கோபுரம்: கூடுதலாக, கும்பமேளாவில் 35 மீட்டா் ( சுமாா் 115 அடி) உயரத்தில் இருந்து நீரை பீய்ச்சி அடிக்கும் திறன் கொண்ட ஒரு நீா்கோபுரம் இடம்பெறும். தீ விபத்து ஏற்படும் பகுதிகளை மேலிருந்து கண்காணிக்கும் வகையில் இந்த கோபுரத்தில் உயா் தொழில்நுட்ப கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்படும்.

ரூ.67 கோடி ஒதுக்கீடு: தீ விபத்துகளை முற்றிலுமாக தடுப்பதே எங்கள் நோக்கம். துப்புரவுத் தொழிலாளா்கள் தங்களின் உபகரணங்களைப் பாதுகாப்பான முறையில் பயன்படுத்துவதை தினசரி தணிக்கைகள் மூலம் சரிபாா்க்கப்படும்.

கடந்த கும்பமேளாவில் தீ பாதுகாப்புக்கு ரூ.6 கோடி மட்டுமே செலவிடப்பட்ட நிலையில், இம்முறை ரூ.67 கோடியாக அத்தொகை உயா்த்தப்பட்டுள்ளது பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதைக் காட்டுகிறது’ என்றாா்.

Leave A Reply

Your email address will not be published.