கனடா வாசியான , யாழ் கணக்காளர் கொழும்பு விமான நிலையத்தில் கைது
நேற்று (26) லண்டனில் இருந்து பண்டரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய 55 வயதுடைய லண்டனில் பணிபுரியும் இலங்கை அலுவலக பெண் உதவியாளரின் கைப்பையை திருடியமைக்காக , இலங்கை (யாழ்) – கனேடிய இரட்டைக் குடியுரிமை பெற்ற கணக்காளர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
பொருட்களை பறி கொடுத்த பெண் , இலங்கை மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் இரட்டைக் குடியுரிமை பெற்ற அலுவலக உதவியாளராவார். பன்னிப்பிட்டிய பிரதேசத்தில் வசிப்பவராவார்.
அவரது கைப்பையில் £ 2,700 (சுமார் ரூ. 1,423,500) பணமும், இரண்டு புதிய iPhone ஃபோன்கள் மற்றும் இரண்டு புதிய சாம்சங் ஃபோன்கள் இருந்துள்ளன.
விமானம் தரையிறங்கிய சிறிது நேரத்தில் அவரது கைப்பை காணாமல் போனதை உணர்ந்த அந்த பெண், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஊழியர்களிடம் புகார் அளித்தார்.
உடனடியாக விமானத்தில் தேடுதல் நடத்தப்பட்ட போதிலும், கைப்பையைக் கண்டுபிடிக்க முடியவில்லை. விமானிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும், அவர் BIA இல் உள்ள ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விசாரணை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் புலனாய்வாளர்கள், BIA பொலிஸ் அதிகாரிகளுடன் சேர்ந்து, பயணிகளையும் , அவர்களின் பொருட்களையும் சோதனை செய்தனர்.
இறுதியாக கைப்பை 60 வயதான கணக்காளர் ஒருவரிடமிருந்து கண்டெடுக்கப்பட்டது. அவர் இலங்கை மற்றும் கனடா ஆகிய இரு நாடுகளில் இரட்டை குடியுரிமை பெற்ற குடிமகன் என்பதும் , அவர் கனடாவில் வசிப்பவர் என்பதோடு , இலங்கையில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்டவர் என்பதும் தெரியவந்துள்ளது.
அவரிடமிருந்து கைப்பை மீட்கப்பட்ட போது, சந்தேக நபர் திருடப்பட்ட பணத்தில் ஒரு பகுதியை விமானத்தில் 6 போத்தல் விஸ்கி மற்றும் 3 போத்தல் வாசனை திரவியம் வாங்க , அந்த பணத்தை பயன்படுத்தியிருந்தார். மீதமுள்ள பணம் மற்றும் மொபைல் போன்களும் அவரது கைப்பையில் இருந்தன.
சந்தேக நபர் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விசாரணையாளர்களால் , BIA போலீசிடம் ஒப்படைக்கப்பட்டார். சந்தேக நபரை கைது செய்த போலீசார் , திருடப்பட்ட பொருட்களை போலீஸ் காவலில் எடுத்துச் சென்றனர்.
கட்டுநாயக்க விமான நிலைய (BIA)போலீசால் நடத்தப்பட்ட விசாரணைக்குப் பின், திருடப்பட்ட பணம் மற்றும் பொருட்கள் இன்று நீர்கொழும்பு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளன.