வெள்ள அனர்த்த நிலை தொடர்பாக யாழ். மாவட்ட அரச அதிபருடன் இளங்குமரன் கலந்துரையாடல்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போதைய வெள்ள அனர்த்த நிலைமையில் எடுத்து வரும் நடவடிக்கைகள் தொடர்பாக தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன், மாவட்ட அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபனுடனும், துறைசார் திணைக்கள அதிகாரிகளுடனும் இன்று புதன்கிழமை முற்பகல் 11 மணிக்கு யாழ். மாவட்ட செயலக அரச அதிபர் அலுவலகத்தில் கலந்துரையாடினார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன்,
“தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்புக்கு வடிகால்கள் சிறந்த நிலையில் இல்லாமைதான் காரணமாகும்.
நாம் யாழ். மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்புக்களைப் புத்திஜீவிகளுடன் நேரடியாகச் சென்று ஆராய்ந்து வருகின்றோம்.
குறிப்பாக யாழ். நல்லூர் மற்றும் தென்மராட்சி பகுதிகளில் முறையான வடிகாலமைப்புக் கட்டமைப்புச் செயற்பாடுகள் இல்லாமையால்தான் அந்தப் பகுதிகள் வெள்ளப் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. இதனை நாம் நேரில் கண்டறிந்தோம்.
எதிர்வரும் காலங்களில் யாழ். மாவட்டத்தில் வெள்ளப் பாதிப்பு ஏற்படாத வகையில் பல துறைசார்ந்தவர்களின் ஆலோசனைகளையும் பெற்று குறிப்பாக சாதாரண மக்களின் கருத்துக்களையும் கூட உள்வாங்கி சிறந்த முறையில் கட்டமைப்புக்களை உருவாக்குவதற்கும் நாட்டை சிறந்த முறையில் கட்டியெழுப்புவதற்கும் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம்.” – என்றார்.
தற்போது அவசரமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் அவர் ஆராய்ந்தார்.
இந்தக் கலந்துரையாடலில் பனை அபிவிருத்தி சபைத் தலைவர் வி.சகாதேவனும் கலந்துகொண்டார்.
மேலும், இந்தக் கலந்துரையாடலில் யாழ். மாவட்ட மேலதிக அரச அதிபர் (காணி), மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட பிரதம கணக்காளர், அனர்த்த முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள், மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு உத்தியோகத்தர்கள், மாவட்ட அனர்த்த நிவாரண சேவைகள் உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.