தெமோதர பதுளை புகையிரத பாதையை சீர்செய்ய இன்னும் சில நாட்கள்……
மண் குன்றுகள் மற்றும் பாறைகள் சரிந்து வீழ்ந்தமையினால் தடைப்பட்டுள்ள மலையக புகையிரதத்தில் தெமோதர – பதுளை புகையிரதத்தை இயக்க மேலும் சில நாட்கள் ஆகும் என ரயில்வே அதிகாரிகள் நேற்று (28) பிற்பகல் தெரிவித்துள்ளனர்.
பதுளை மாவட்டத்தில் பெய்த அடைமழையுடன் கடந்த 25ஆம் திகதி மலையக புகையிரதத்தின் ஹாலியால தெமோதரக்கு இடையில் புகையிரத பாதையில் பாரிய மண்மேடு சரிந்து வீழ்ந்ததன் காரணமாக பதுளைக்கும் தெமோதரவிற்கும் இடையிலான புகையிரத சேவை முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது.
நானுஓயா புகையிரத மேற்பார்வை முகாமையாளர் அன்டன் விரோஷன் விக்ரமரத்ன உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் நேற்று (28) பிற்பகல் இந்த இடத்திற்கு வந்து மண் மேடுகளை அகற்றுவதற்கு தேவையான பணிகளை மேற்கொண்டனர்.
எனினும் ரயில் பாதை இடிந்து மண்சரிவு உள்ள இடத்தில் தற்போதும் நீரோடை ஓடுவதாகவும், மண் அகற்றும் போது மேலும் பல மண் மேடுகள் சரிந்து விழும் எனவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது பேக்ஹோ இயந்திரம் மூலம் மண் அகற்றப்பட்டு வருவதாகவும், அகற்றப்பட்ட மண்ணை போடுவதற்கு அந்த இடத்தில் போதிய இடவசதி இல்லாததால் வேறு இடத்திற்கு மண் எடுத்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.
மேலும், பாரிய மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளதால், அந்த இடத்திற்கு செல்வதற்கு தனியான கற்களால் ஆன பாதையை தயார் செய்ய வேண்டியுள்ளதாகவும், பதுளை தெமோதர ரயிலின் சேவையை சீரமைக்க இன்னும் சில நாட்கள் ஆகும் எனவும் ரயில்வே அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.