மலேசியாவில் மோசமான வெள்ளம்; மூவர் மரணம்
மலேசியாவின் சில மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் மூவர் உயிரிழந்தனர்; 80,000க்கும் அதிகமானோர் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று மலேசிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
பத்தாண்டுகளில் அந்நாட்டின் ஆக மோசமான வெள்ளம் இந்தப் பருவமழைக் காலத்தில் ஏற்படக்கூடும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
அக்டோபர் முதல் மார்ச் வரை பருவமழைக் காலத்தின்போது மலேசியத் தீபகற்பத்தின் கிழக்குக் கடலோரப் பகுதிகளில் வெள்ளம் வழக்கமாக ஏற்படுவதுண்டு. இருப்பினும், இந்த வாரத்தின் கடும் மழையால் பெரிய அளவில் மக்களை வெளியேற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி மூவர் மாண்டதாகவும் 80,589 பேர் ஏழு மாநிலங்களில் உள்ள தற்காலிகத் தங்குமிடங்களுக்குக் கொண்டுசெல்லப்பட்டதாகவும் தேசிய பேரிடர் தளபத்திய நிலையத்தின் இணையத்தளம் தெரிவித்தது.
கிளந்தான், திரங்கானு ஆக மோசமாகப் பாதிக்கப்பட்ட மாநிலங்களாகும். உயிரிழந்தவர்கள் குறித்து மேல்விவரங்கள் வெளியிடப்படவில்லை.
அண்மைய வெள்ளம், 2014ஆம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ளத்தைக் காட்டிலும் மேலும் மோசமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக துணைப் பிரதமரும் தேசிய பேரிடர் நிர்வாகக் குழுவின் தலைவருமான அகமது ஸாஹிட் ஹமிடி கூறினார்.
அரசாங்கம் மீட்புப் படகுகள், நான்கு சக்கர வாகனங்கள், ஹெலிகாப்டர்கள் ஆகியவற்றோடு, 82,000க்கும் மேற்பட்ட பாதுகாப்பு அதிகாரிகளையும் பணியில் அமர்த்தியிருப்பதாக அகமது ஸாஹிட் தெரிவித்தார்.
இந்நிலையில், வெள்ளம் காரணமாக, கிழக்குக் கடலோரப் பகுதிகளில் ஒன்பது ரயில் பயணங்களை ரத்துசெய்துள்ளதாக தேசிய ரயில்வே நிறுவனமான ‘கேடிஎம் பெர்ஹட்’ ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் தெரிவித்துள்ளது.