கனரக வாகன ஓட்டுநரைக் காப்பாற்றிய தென்கொரியத் தீயணைப்பு வீரர்
தென்கொரியாவில் கனரக வாகன ஓட்டுநர் ஒருவர் 11 மீட்டர் உயரத்திலிருந்து விழுவதைத் தடுத்துள்ளார், அவசரநிலை மீட்பு ஊழியர் ஒருவர்.
அந்த மீட்பு ஊழியர் 45 நிமிடங்களுக்கு தமது கைகளால் அந்த ஓட்டுநரைப் பிடித்துக்கொண்டிருந்ததாக ‘கியோங்புக்’ தீயணைப்புத் தலைமையக அதிகாரிகள் கூறினர்.
அந்த விபத்து ‘ஜூங்காங்’ விரைவிச்சாலையின் ஒரு பகுதியில் அமைந்திருந்த பாலத்தில் நவம்பர் 27ஆம் தேதி காலை 9.30 மணிவாக்கில் நடந்தது.
பனியால் மூடப்பட்ட சாலையில் அந்த வாகனம் சறுக்கி, தடுப்புகளை மோதியது. அதனால், 60 வயது மதிக்கத்தக்க அந்த ஓட்டுநர் இருக்கையிலிருந்து தூக்கி எறியப்பட்டார்.
சில நிமிடங்களிலேயே தீயணைப்பு வீரர் பார்க் ஜுன் ஹியோனும் அவசரநிலை மீட்புச் சேவையைச் சேர்ந்த மற்ற உறுப்பினர்களும் சம்பவ இடத்தைச் சென்றடைந்தனர். அந்த ஆடவர் சேதமடைந்த ஓட்டுநர் இருக்கையிலிருந்து தொங்கிக்கொண்டிருந்த நிலையில் காணப்பட்டார்.
வாகனத்துக்கு ஏற்பட்ட சேதத்தால், அதன் கதவுகளைத் திறக்கமுடியவில்லை. மீட்புப் பணியை மேற்கொள்ள, பணியாளர்களுக்குப் போதிய இடம் இல்லை.
அந்த ஓட்டுநர் விழாதிருக்க, திரு பார்க் என்ற அந்த அவசரநிலை மீட்பு ஊழியரால் அவரின் கைகளை மட்டுமே பிடிக்க முடிந்தது.
45 நிமிடங்கள் ஓட்டுநரின் கைகளைப் பிடித்துக்கொண்டிருந்த திரு பார்க், ஓட்டுநரை இழந்துவிடுவோம் என்ற பயத்தில், மற்ற மீட்புப் பணியாளர்களுடன் இடம் மாறத் தயங்கினார்.
ஓட்டுநரைக் காப்பாற்ற, மற்ற மீட்புப் பணியாளர்கள் வான் தளத்தைக் கொண்ட வாகனம் ஒன்றைக் கொண்டுவரும்வரை திரு பார்க் அந்த ஓட்டுநரின் கைகளைப் பிடித்துக்கொண்டிருந்தார்.
அவர் இறுதியில் காலை 10.30 மணிவாக்கில் காப்பாற்றப்பட்டார்.